மாலத்தீவின் அரசியல் குழப்பம் – இந்திய மாலத்தீவு உறவுகள்

மாலத்தீவின் அரசியல் குழப்பம் – இந்திய மாலத்தீவு உறவுகள்

குழப்பத்திற்கான காரணம்

இப்போதைய அரசியல் குழப்பங்களுக்கு காரணம், மாலத்தீவின் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. முன்னாள் அதிபர் முகமது நஷீத், ஜும்கூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம், அதாலத் கட்சித் தலைவர் இம்ரான் அப்துல்லா, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நஜீம் உள்ளிட்ட 12 அரசியல் குற்றவாளிகளையும் விடுவித்து கடந்த பிப்ரவரி 1-இல் மாலத்தீவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் மீதான வழக்குகள் மாலத்தீவின் அரசியல் சாசனத்துக்கும் சர்வதேச சட்டத்துக்கும் எதிரானவை என்றும் நீதிமன்றத்தின் மீது வழக்கு விசாரணையில் அரசியல் அழுத்தம் தரப்பட்டது என்றும் தீர்ப்பு கூறியது. அதுமட்டுமல்லாமல், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்தது. இதன் மூலம் மாலத்தீவின் நாடாளுமன்றமான மஜ்லிஸில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் அடைகின்றன.

இதைத் தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அகமது ஆரிப் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பணிவதாக அறிவித்தார். உடனடியாக அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போவதாகச் சொன்னவுடன் அவரும் மாற்றப்பட்டார். விளைவு, இளைஞர்கள் பெருந்திரளாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினர்.
இப்போது மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவின் முக்கியத்துவம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தென்கிழக்காக சுமார் 1000 கி.மீ. தூரத்தில் அரபிக் கடலில் இருக்கும் மாலத்தீவுக்கு புவியியல் ரீதியாக மிகப்பெரிய முக்கியத்துவம் இருப்பதால்தான் உலக நாடுகள் இந்தப் பிரச்னையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன.  ஆசியாவுக்கும், ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து நடைபெறும் இந்து மகாசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் உலக வல்லரசுகள் அனைத்துமே மாலத்தீவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவுக்கு மிகமிக நெருக்கமான நாடாக இருந்த மாலத்தீவு, நமது ஏனைய அண்டை நாடுகளைப் போலவே சீனாவுடனான நெருக்கத்தை சமீப காலமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதும், மாலத்தீவின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதற்கான காரணம்.

மாலத்தீவின் அரசியல் மேம்பாடு

1968-இல் இப்ராஹிம் நசீர் தலைமையில் மாலத்தீவு சுதந்திரக் குடியரசாக தன்னை அறிவித்துக் கொண்டது என்றாலும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. மக்கள் எழுச்சியின் விளைவாக இப்ராஹிம் ஆட்சி அகற்றப்பட்டது. மமூன் அப்துல் கயூம் 1978-இல் ஆட்சிக்கு வந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் மாலத்தீவில் அவரது ஆட்சிதான். மூன்று முறை அவருக்கு எதிரான புரட்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.
அப்துல் கயூமின் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன் வைத்தவர் முகமது நஷீத். மாலத்தீவின் மண்டேலா என்று அழைக்கப்பட்ட நஷீத், 2008-இல் நடந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் கயூமைத் தோற்கடித்து அதிபரானார். முகமது நஷீத் 2012-இல் மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பியதன் பின்னணியில் பதவி விலகினார். அவர் கைது செய்யப்பட்டு தீவிரவாதக் குற்றச்சாட்டுக்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்று கூறி அவரது உடனடி விடுதலைக்கு சர்வதேச அளவில் அழுத்தம் தரப்பட்டது.
2013-இல் அதிபர் தேர்தல் நடந்தபோது, முதல் சுற்றில் முகமது நஷீத் அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் அவர் தண்டிக்கப்பட்டவர் என்று காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. மறு தேர்தலில் முன்னாள் அதிபர் கயூமின் உறவினரான அப்துல்லா யமீன் அதிபரானார். நஷீதுக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்தது. இப்போதும்கூட, மாலத்தீவில் கணிசமான ஆதரவை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் முகமது நஷீத்.

முட்டுக்கட்டை தொடர்கிறது

அதிபர் யமீன் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, அவருக்கு எதிராக இருக்கும் நீதிபதிகள் கைது செய்யப்பட்டு சாதகமாக இருக்கும் நீதிபதிகள் மூலம் முன்னால் தரப்பட்ட தீர்ப்பை திருத்தி எழுத முற்பட்டிருக்கிறார். சர்வதேச அளவில் ஐ.நா. சபை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகியவை யமீன் உச்ச நீதிமன்றத்தின்  முந்தையத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இந்தியாவின்  நிலை

இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். மாலத்தீவு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இந்தியா வாளாவிருக்க முடியாது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோருவதுபோல, மாலத்தீவில் இந்திய ராணுவம் தலையிடுவது என்பதும் இயலாது. ஏற்கெனவே சீனாவுடன் அதிபர் அப்துல்லா யமீன் நெருக்கமாக இருக்கும் நிலையில், எந்தவித ராணுவத் தலையீடும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை மாலத்தீவில் தோற்றுவிக்கக் கூடும்.சீனா உடனடியாகத் தலையிடாமல் இந்தியாவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்போவதாக தெரிவித்திருப்பது, நல்ல அறிகுறி.

ஐ.நா. சபையின் மேற்பார்வையில் தேர்தலை நடத்தவும் அதை அதிபர் அப்துல்லா யமீனும், முன்னாள் அதிபர் முகமது நஷீதும் ஏற்றுக்கொள்வதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். மாலத்தீவில் ஜனநாயகம் மலர்ந்தால் மட்டுமே இந்து மகாசமுத்திரத்தில் அமைதி நிலவும் என்பதை இந்தியாவும் சீனாவும் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோன்ற நிலைமை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வரவும் குறைந்தால் மாலத்தீவின் பொருளாதாரம் தகர்ந்து விடும். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். ஆகவே, உடனடியாக ராஜதந்திர ரீதியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு.

இந்திய மாலத்தீவு உறவுகள்

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத் தீவுகளின் தெற்கே அமைந்துள்ளது மாலத்தீவு. நம் நாடு பிரிட்டனிடமிருந்து 1947-ல் சுதந்திரம் அடைந்தது என்றால், மாலத்தீவு 1966-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போதிலிருந்தே இரு நாடுகளும் மிகுந்த நட்போடுதான் இருந்து வந்திருக்கின்றன. 1976-ல் இரு நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள நீர் எல்லைகளை சிக்கலின்றி பிரித்துக் கொண்டன.

1982-ல் ஒரு சலசலப்பு. மாலத்தீவு அதிபர் மமூன் அப்துல் கயூம் என்பவர் இந்தியாவுக்குச் சொந்தமான மினிக்காய் தீவு உண்மையில் மாலத்தீவுக்கு உரியது என்றார். பரபரப்பு கிளம்பியது. உடனடியாக மாலத்தீவு அரசு அறிக்கை வெளியிட்டது – ‘நாங்கள் மினிக்காய் தீவுக்கு உரிமை கோரவில்லை’ என்று.

பிறகு 1981-ல் இரு நாடுகளுக் கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சார்க் அமைப்பு உருவானதிலிருந்தே இந்தியாவும், மாலத்தீவும் அதன் உறுப்பினர்கள்.மாலத்தீவு இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் அருகிலுள்ள நாடு. இதையும் மனதில் கொண்டுதான் இந்தியா, மாலத்தீவு உடனான நல்லுறவைத் தொடர வேண்டியிருக்கிறது.

1988 நவம்பரில் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் 80 தமிழ் ஈழத்துக்கான மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவில் ஊடுருவினார்கள்.மாலே நகரிலுள்ள விமான நிலை யத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்களது மற்றொரு முக்கிய நோக்கமான `அதிபர் முமூன் அப்துல் கயூமைக் கைது செய்வது’ என்பதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார்.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ராஜீவ்காந்தி. மாலத்தீவு அரசுக்கு ஆதரவாக 1600 ராணுவ வீரர்களை அனுப்பினார். மாலத்தீவு அரசு உதவி கோரிய அரை நாளிலேயே அந்த உதவி அளிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே மாலத்தீவு அரசைப் பற்றியிருந்த ஆபத்து நீங்கியது. இலங்கை தீவிரவாதிகளை இந்திய ராணுவம் ஒடுக்கியது. ஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா

‘இன்னொரு நாட்டின் ஊடுருவல்’ என்று இந்தியாவை அப்போது பிற நாடுகள் விமர்சிக்கவில்லை. மாறாக இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ இந்தியா மதிக்கத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது’’ என்றார்.“ மாலத்தீவு ஆட்சி காப்பாற்றப் பட்டது. எங்களால் ராணுவத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு அனுப்பியிருக்க முடியாது. இந்தியாவுக்கு நன்றி’’ என்றார் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர்.

சோவியத் யூனியன், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்தியாவின் உதவியைப் பெரிதும் பாராட்டின.இதற்குப் பிறகு இந்தியாவும், மாலத்தீவும் மேலும் நெருக்க மாயின. இலங்கை அரசுடன் உரசல்கள் ஏற்படும்போதெல்லாம் இந்தியாவின் ஆதரவைப் பெரிதும் நம்பி வந்தது மாலத்தீவு.

இந்திய அரசின் பொருளா தார உதவியுடன் மாலத்தீவின் கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டன. தலைநகர் மாலேவில் இந்திராகாந்தி நினைவு மருத்துவமனை எழுப்பப்பட்டது.

சர்ச்சைகள்

ஏப்ரல் 2006-ல் இந்திய கடற் படை ஒரு மிகச்சிறந்த போர்க்கப் பலை மாலத்தீவுக்குப் பரிசாக அளித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோள் காரணமாக இந்தியா அந்த நாட்டில் தனது 2 ஹெலிகாப்டர்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்தது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டா என்பதை இந்த ஹெலி காப்டர்கள் அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருக்கும். மாலத்தீவின் முழுக் கடல் எல்லைகளையும் பாதுகாப்பதற் கான ஒரு திட்டத்தையும் இந்தியா வடிவமைத்ததுடன், செயல்படுத்துதலிலும் இறங்கியது. ஆனால் இந்த நல்லுற வில் உண்டானது ஒரு பெரிய பின்னடைவு.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள விமான நிலையத்தை நவீனமயமாக்க அந்நாட்டு அரசுடன்  இந்தியாவைச் சார்ந்த ஜிஎம்ஆர் குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தப்படி விமான நிலையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு பயணியிடமிருந்தும் 25 டாலர் தொகை வசூலிக்கப்பட்டு அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஜிஎம்ஆர் குழுமத்துக்கு வந்து சேர வேண்டும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை இப்படி வசூலாகவில்லை என்றால் அதை மாலத்தீவு அரசு ஈடுகட்ட வேண்டும்.ஆனால் மாலத்தீவு அரசு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்பதோடு ஒப்பந்தத்தையும் குறித்த காலத்துக்கு முன்பாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஜிஎம்ஆர் பிரச்சினையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் உள்ள உறவு கொஞ்சம் சரிந்தது. தவிர ஆளும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராக கூறிய சில விமர்சனங்கள் இந்தியாவைக் கோபம் கொள்ள வைத்தது.

இரண்டரை கோடி டாலர் அளவுக்குச் செய்வதாக இருந்த உதவிகளை இந்தியா நிறுத்திக் கொண்டது. மாலத்தீவில் தேசிய போலீஸ் அகாடமி ஒன்றை எழுப்பித் தரவும் இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது. அதையும் நிறுத்தி வைத்தது.

இந்தியா எவ்வாறு அனுக வேண்டும்

பக்கத்து நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது என்பது முதலீடு செய்வதும் தேவையில்லாமல் சலுகைகள் காட்டுவதும் அல்ல என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் பலன் தரக்கூடிய பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பது, மரியாதை தருவது என்பதாகும். இந்த விஷயத்தில் சீனாவை மிஞ்ச இந்தியாவால் முடியும். இந்தியாவின் பக்கத்து நாடுகள் புவி எல்லையையும் தாண்டி வேறு வகையிலும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளன.

வரலாறு, மொழி, பண்பாடு, சமையல் என்று அந்தத் தொடர்புகள் பலவகைப்படும். பாகிஸ்தானைத் தவிர வேறு எந்த நாடும் இந்தியாவைத் தனக்குப் போட்டியாளராகப் பார்ப்பதில்லை. சீனாவுடனான செயல்களில் அதன் விரோதத்தை அதே அளவுக்கு அதனிடம் திருப்பிக்காட்டலாம்; தெற்காசியாவில் அப்படியே மாற்றிச் செய்ய வேண்டும். தெற்காசியப் பகுதியில் பக்கத்தில் உள்ள நாடுகளிடம் இந்தியா பகைமை பாராட்டவே கூடாது, அவற்றின் நன்மையில் அக்கறை உள்ள நாடாகவே தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!