சிறப்புக் கட்டுரை|பகத்சிங்|ராஜகுரு|சுகதேவ்| புரட்சி இயக்கங்கள்| IYACHAMY ACADEMY

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 சிறப்புக் கட்டுரை

டவுன்லோடு புரட்சி இயக்கங்கள்

 

புரட்சி இயக்கங்கள்

அமைதியான வழிமுறைகளில் அதாவது அரசியலமைப்பு முறைமைகளின் வழியாக அரசியல் அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு வாய்ப்பில்லாத போது ஆயுதப்புரட்சி ஏற்படுவது என்பது தவிர்க்க இயலாத வரலாற்று உண்மையாகும். குறைகளைத் தீர்ப்பதற்கு முறையான பிரதிநிதித்துவ மன்றங்களோ கொடுமைகளை அகற்றி உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களோ இல்லாத நிலையில் குறைகளும் கொடுமைகளும் அவற்றால் பாதிக்கப்பட்ட மனித நெஞ்சங்களை குமுறியெழும் எரிமலையாய் அனல் பிளம்பாக்கி புரட்சியாய் வெடிக்கின்றன. ஸார்களின் வல்லாட்சியை எதிர்த்து புரட்சி இயக்கங்கள் தோன்றியதற்கும் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து இத்தாலியில் கார்போனரி போன்ற இரகசிய இயக்கங்கள் தோன்றியதற்கும் இதுவே காரணமாகும், அரசியலமைப்பு வடிகால் இல்லாவிட்டால் அரசியலுரிமை உணர்வுகள் ஆயுதங்கள் வழியாகத்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் நிறைவேறா அரசியல் உணர்வுகளை ஒரு புரட்சி இயக்கமாக ஒருங்கமைக்க ஒரு தலைமையோ நிறுவனமோ இல்லை. எனவே அங்கொன்று இங்கொன்றுமாக திடீரென தோன்றிமறையும் இடி மின்னலாகவே இருந்தன. அவை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், புரட்சி வீரர்களின் நாட்டுப் பற்றுமிகு துணிச்சல் தூக்கு கயிற்றை முத்தமிடும் போதும் துவளாத லட்சியப் பற்றும் சேர்ந்து கிடந்த இந்திய சமுதாயத்தை விழிப்படையச் செய்தது. அவர்கள் சிந்திய ரத்தத் துளிகள் தேசிய உணர்வின் வித்துக்களாக மாறின.

புரட்சி வன்முறை தோன்றக் காரணங்கள் :

ஏற்கனவே கூறியபடி தங்கள் குறைபாடுகளுக்கு அரசியலமைப்பு முறைப்படி பரிகாரம் தேட எந்தவித வாய்ப்பில்லாத தால் வன்முறையை நாடத் தொடங்கினர்.

இரண்டாவதாக, மிதவாதிகளும் தீவிரவாதிகளும் வேண்டுகோள், விண்ணப்பங்கள், தீர்மானங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தும் நியாயமான கோரிக்கைகள் கூட புறக்கணிக்கப்பட்டதை கண்ணுற்ற இளைஞர்கள் விரக்தியடைந்த நிலையில் வேறு வழியே இல்லையா என்று ஆவேச உணர்வு கொண்டு ஆயுதங்களை நாடினர்.

மூன்றாவதாக, ஆங்கில எகாதிபத்தியத்தின் அடக்கு முறைக்கணைகள் அமைதியான அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதும் பாய்ந்தன; சான்றாக வங்கப் பிரிவினையின்போது பரிசல் என்ற இடத்தில் அமைதியாக பேரணி நடத்திய மக்கள் மீது கண்மூடித்தனமாக அரசு தாக்கியது. சுரேந்திரநாத் பானர்ஜியை கைது செய்தது ஆகியவை இளைஞர்களைக் கொதிப்படையச் செய்தது.

நான்காவதாக, வங்காளிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய செய்தித்தாட்கள் ஆகியவற்றின் ஏகோபித்த வேண்டுகோளைப் புறக்கணித்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக வங்கத்தை பிரிவினை செய்தது, ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை பச்சையாக வெளிப்படுத்தியது. மக்கள் தங்கள் அதிருப்தியை சுதேசி இயக்கம், அன்னியப் பொருள் புறக்கணிப்பு போன்ற அமைதியான வழியில் வெளிப்படுத்தியதைக்கூட அரசு அசுரமுறையில் தடை செய்ய முயன்றது.

ஐந்தாவதாக, “ யுகாந்தார் ‘ கேசரி’மராத்தா’ வந்தே மாதரம் ஆகிய செய்தித்தாட்கள் , ஆங்கிலக் கொடுங்கோன்மையை அப்படியே படம் பிடித்து காட்டியது , பிற நாட்டு  புரட்சியாளர்களின் செய்திகளை வெளியிட்டு இளைஞர் உள்ளங்களை எரிமலையாக்கின. திலகர் கேசரியில் , சிவாஜி அப்சல் கானை தந்திரமாக கொன்றதை நியாயப்படுத்தி எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது.பலரின் நல்வாழ்வுக்காக ஒருவர் கொல்லப்படுவது அநீதியன்று என அவர் விளக்களித்தது வன்முறைக்கு  இடமளித்தது.

ஆறாவதாக  சமயப்பண்பாட்டில் தீவிர பற்றுக்கொண்ட சமய  ஞானிகள் ஆங்கிலேயே ஆட்சியினால்  தங்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்தனர். சமயப் பண்பாடுகளை காப்பற்ற எவ்வித தியாகங்களுக்கும் தயாராக இருந்தனர். சான்றாக பஞ்சாப்பில் குருரால்சிங்கின் நாம்தாரி சீக்கிய இயக்கம் , சையத் அகமது என்பாரின் வகாபி இயக்கம் ஆகியவை சமய  மறுமலர்ச்சி உணர்வின் அடிப்படையில் அன்னிய  ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுத புரட்சியில்  ஈடுபட்டன. வங்காளத்தில் காளி, துர்க்கை வழிபாடு தீவிர தேசிய உணர்வின் எதிரொலியாக கருதப்பட்டன. திலகரின் கணபதி வழிபாடும், சிவாஜி விழாவும் அன்னிய எதிர்ப்பு இயக்கத்திற்கு தீவிர ஆன்மிக உண்ர்வு ஊட்டுவதற்கே நடத்தப்பட்டன. நீதியை நிலை நாட்ட சொந்த ஆசானையும் , உறவினர்களையுமே கொன்றொழித்த கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் தர்ம யுத்தமாக விளக்கியதும் எடுத்துக்காட்டப்பட்டது.

ஏழாவதாக பஞ்சமும் கொள்ளை நோயும் மக்களின் துயரங்களை மேலும் அதிகரித்தன. அதிகாரிகளின் ஆணவப்போக்கும் , தாமதமான அற்பமான நிவாரண பணிகளும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போலிருந்தது.

இறுதியாக ஐரோப்பாவில் ஏறத்தாழ இதே சமயத்தில் நடைபெற்ற வன்முறைகளும் அரசியல் படுகொலைகளும், கற்றறிந்த இளைஞர்களிடையே புரட்சி எண்ணங்களை தோற்றுவித்தது. ரஷ்யப் பேரரசர் இரண்டாம் அலெக்ஸாண்டர்,பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் கார்னட், ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் , ஸ்பெயின் குடியரசுத் தலைவர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்குப் பின்னனியில் உரிமை வெறியும் தீவீர நாட்டுப்பற்றும், அடக்குமுறைக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையும் இருந்தன.

சபேகர் சகோதரகள் (Chapekar Bros):

1894-6 சபேகர் கோதரர்கள் ஹிந்து தர்ம சம்ரக்ஷனி சபா என்ற சபையை நிறுவினர். திலகரின் சிவாஜி, கனேசர் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர்கள் தங்கள் சமய தேசியப் பண்புகளைப் பாதுகாக்க ஆயுதம் தூக்கவும் தயாராயிருந்தனர் 1897 பகுதியில் பஞ்சமும் கொள்ளை நோயுமான பிளெக்கும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது. பிளேக் நோய் தடுப்பு ஆணையரான ராண்ட் ஆணவம் பிடித்த ஆதிக்க வெறியராயிருந்தார் அப்போது கொண்டாடப்படவிருந்த விக்டோரியா அரசியாரின் அறுபதாம் ஆண்டு முடிசூட்டு விழாக் கொண்டாட்டதிற்கு நிதி வசூல் செய்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியொரு முகாமில் அடைத்து வைத்தார். அம்முகாம்கள் சிறு நரகங்களாக இருந்தன. நோயின் கொடுமையை விட நிவாரணக்  கொடுமை மக்களை அதிகம் வாட்டியது திலகர் தம் “கேசரி” இதழில் ராண்டின் தன்மூப்பான செயல்களைக் கண்டித்து கட்டுரை எழுதினார்- ஆணையர் ராண்டும் அவரது உதவியாளர் அயர்ஸ்ட் என்பாரும் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். சபேகர் கோதரர்களில் மூத்தவரான தாமோதரும் அவரது இளைய சகோதரரும் கைது அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். எனவே தூக்கிலடப்பட்டனர்.

 நாசிக் சதி வழக்கு

பம்பாய் மாநிலத்தில் நாசிக் பகுதியில் புரட்சிக் கருத்துகளை பரப்புவதில் கனேஷ் சவார்க்கர், வீ.டி சவார்க்கர் என்ற சகோதரர்களுக்கு பெரும்பங்கு உண்டு . சபேகர் சகோதரர்களின் உயிர்த்தியாகம் அவர்களை உலுக்கியது. ஆயுதப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள அவர்கள் மித்ரமேளா என்ற சங்கத்தை நிறுவினர். இதுவே 1904 ஆம் ஆண்டு பின்னர் அபினவ் பாரத் என்ற இரகசிய புரட்சிகர இயக்கமாக மாற்றியமைக்கப்பட்டது.இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் , நாட்டின் விடுதலைக்காக உடல், பொருள் ஆவி அத்தனையும் தியாகம் செய்வதாக தங்கள் இயக்கத்தில் நடவடிக்கைகளை ரகசியமாக வைத்துக் கொள்வதாகவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இச்சமயத்தில் வங்கப் பிரிவினையால் எழுந்த சுதேசி இயக்கமும் அன்னியப் பொருள் புறக்கணிப்பும் மராத்திய மாநிலத்திலும் பரவியது. சவார்க்கர் சகோதரர்கள் அவ்வியக்கத்தின் முன்னணியில் நின்றனர்; இதை கவனித்த அரசு மூத்தவரான கணேஷ் சவார்க்காரை கைது செய்து விசாரணைக்கு கொண்டு வந்தது. அவ்வழக்கை விசாரித்த நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சன், கணேஷ் சவார்க்கருக்கு ஆயுள் தண்டனை அளித்து நாடு கடத்த உத்தரவிட்டார். அதே சமயத்தில் அதே நீதிபதி, ஒரு ஏழை வண்டிக்காரன் மரணத்திற்குக் காரணமான வில்லியம்ஸ் என்ற ஆங்கில பொறியியல் வல்லுநருக்கு எந்தவித தண்டனையும் அளிக்கவில்லை; இதை கண்ணுற்ற அபினவ் பாரத் உறுப்பினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்களுள் ஒருவரான ஆனந்த் லசஷ்மண் கான் ஹ்ரே என்பார் 1909 ல் ஜாக்சனை சுட்டுக் கொன்றார் . இதனால் விழித்துக் கொண்ட அரசாங்கம் புலன் விசாரணை தொடங்கியது கானு வைத்யா என்ற அபினவ் பாரத் உறுப்பினர் அப்ருவர் ஆனதால் அரசின் பணி எளிதானது. அவன் கொடுத்த தகவலின் பேரில் கான் ஹ் ரே உட்பட 37 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். “நாசிக் சதி வழக்கு’ என்று அழைக்கப்பட்ட அவ்விசாரணையில் கான் ஹ்ரே உட்பட மூவர் தூக்கிலிடப்பட்டனர். மற்றவர்களுக்கு வெவ்வேறு கால சிறைதண்டனையளிக்கப்பட்டது.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா (1957-1930)

மாக்சிம் கார்கி என்ற புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளரால் “இந்திய மாஜினி’ என்று போற்றப்பட்ட ஷியாம்ஜி வெளி நாட்டில் (பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து) இருந்துகொண்டு இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட புரட்சி வீரர் கட்ச் மாண்ட்ஷியில் பிறந்த அவர் சமஸ்கிருத மொழிப்புலமை காரணமாக இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றினார் 1881ல் பெர்லினிலும், 1883 ல் லெளடனி லும் நடைபெற்ற கீழ்திசை மாநாட்டில் இந்திய அரசின் சார்பில் கலந்து கொண்டார். பின் இந்தியா வந்து சிறிது காலம் ரட்லம், ஜானகார் அரசுகளில் திவானாகப் பணிபுரிந்தார். பின் இங்கிலாந்து திரும்பி இந்தியன் சோஷியாலஜிஸ்ட் இதழை வெளியிட்டார். அது அரசியல் பற்றிய அவரது புரட்சிக் கருத்துக்களை பரப்பி வந்தது, ஏன் இந்தியாமுல் புரட்சி இயக்கங்கள் ரகசியமாக வேண்டும் என்பதற்கான விளக்கத்தை 1907 -6 தமது இதழி கூறியிருந்தார். 1897-ல் சபேகார் சகோதர்கள் மற்றும் திலகர் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்தியாவில்  தனிமனித சுதந்திரமும் செய்தித்தாள் சுதந்திரமும் இல்லை என்பது’ தெளிவாகிவிட்டது நீதியைப்பற்றி பிரிட்டிஷார் கூறுவதெல்லாம் ” வெறும் ஏமாற்று வித்தை. இந்தியாவில் எந்தவித இயக்கமும் வெளிப்படையாக இயங்க இயலாது. இரகசிய மாகவே அவை இயங்கவேண்டும் என்பது எனது கருத்து பிரிட்டீஷ் ஆதிக்கத்தை தூக்கி எறிவதற்கு ஒரே வழி ரஷ்ய  நிஹிலிஸ்ட்டுகளின் செயல் முறைகளைக் கடைப்பிடிப்பதுதான். அது கண்ட ஆங்கில அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்றது. எனவே ஷியாம்ஜி பாரிசிற்குச் சென்றார். முதல உலகப்போர் தொடங்கியதும் அவர் ஜெனிவாவிற்கு செல்ல  நேரிட்டது. வி.டி. சவார்க்கார் ,காமா அம்மையார் , சர்தார் சிங்ராணா போன்றோரை இந்தியன் சோஷியாலஜிஸ்ட் புரட்சி  வீரர்களாக மாற்றியதனால் அது மிகையன்று. ஷியாம்ஜியுடன் தொடர்பு கொண்ட மற்றுமொரு புரட்சி வீரர் வீரேந்திர சேட்டா பாத்யாயா. இவர் இந்திய கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

வி. டி. சவார்க்கார் : (1883-1966)

கணேஷ் சவார்க்கரின்  சகோதாரான விநாயக் தாமோதர  சவார்க்கார் வழக்கறிஞர் பணிக்கு பயில்வதற்காக இங்கிலாந்து வந்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி அவர் இந்தியாவிலிருக்கும் போதே ‘அபினவ் பாரத்” என்ற புரட்சி இயக்கத்தை நிறுவியிருந்தார் மாஜினியின் சுய சரிதத்தை மராத்திய மொழியில் வெளியிட்டு அதன் முன்னுரையில் இளைஞர்களை புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். சுதந்திரப் போருக்கு கிழெந்தள செய்யும் செய்யுட்களும் எழுதி வெளியிட்டிருந்தார். இப்போது அவர் இங்கிலாந்து வந்து சேர்ந்ததும் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுடன் தொடர்பு கொண்டார். சவார்க்கார், ஷியாம்ஜி தொடர்பிற்குப் பின் தீவிர புரட்சியாளர் ஆனார். ஷியாம்ஜி லண்டனை விட்டுச் சென்று பின் புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார். பிரிட்டனில் அவர் தங்கியிருக்கும் போது செய்த மாபெரும் பணி 1857-ஆம் ஆண்டு எழுச்சியைப்பற்றி மராத்திய மொழியில் ஒரு நூல் எழுதியதே ஆகும். அந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ஹாலந்தில் இரகசியமாக அச்சடிக்கப் பட்டது. அந்த நூலின் கருத்துக்களை உணர்ந்து கொண்ட பிரிட்டீஷ் அரசு வெளியாகும் முன்னரே அந்நூலைத் தடை செய்தது. அதனை சார்லஸ் டிக்கன்சின் “பிக்விக் பேப்பர்ஸ்” என்று கூறி இரகசியமாக இந்தியாவிற்கு அனுப்பினர். மேலும் 20 கைத்துப்பாக்கிகளை ரகசியமாக இந்தியாவில் உள்ள அபினவ் பாரத் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தார். லண்டனில் உள்ள ‘இந்திய இல்லம்” புரட்சியாளர்களின் பாசறையாகியது. உயர் கல்விக்காக இங்கிலாந்து வந்த ஹர்தயாள் என்ற பஞ்சாபி இளைஞனை புரட்சியாளராக மாற்றிய பெருமை சவார்க் காருடையதாகும்.

இச்சமயத்தில் பிரிட்டீஷ் அரசு 1907-ல் 1857 ஆம் ஆண்டு எழுச்சியை அடக்கிய ஐம்பதாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. அதற்கு எதிராக சவார்க்கார் “இந்திய இல்லத்தில்’ மே 8-ஆம் தேதி அவ்வெழுச்சியை “முதல் இந்திய சுதந்திரப்போர்’ என்று கூறி அதன் ஐம்பதாம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி னார். அதன் பின்தான் அவர் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்” என்ற தமது புகழ் பெற்ற நூலை எழுதத் தொடங்கினார்.

சவார்க்காரின் புரட்சி நடவடிக்கைகளைக் கண்காணித்த பிரிட்டீஷ் காவல்துறை 1910 மார்ச் 13-ல் அவரைக் கைது செய்தது. நாசிக் சதி வழக்கில் அவரைத் தொடர்புபடுத்தி விசாரணைக்காக கப்பலில் இந்தியா கொண்டு சென்றது. அக்கப்பல் மார்சேல்ஸ் என்ற பிரஞ்சுத் துறைமுகத்தில் நின்றபோது சவார்க்கார் குளியலறை குழாய் மூலமாகத் தப்பித்து கடலில் குதித்து கரைசேர்ந்தார்; பிரிட்டீஷ் காவலர்கள் படகில் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். பிரஞ்சு மண்ணில் காலடி வைத்த சவார்க்கார் அங்கு ஒரு பிரெஞ்சு காவலரைச் சந்தித்து தம்மைக் காப்பாற்றுமாறு கோரினார். அரசியல் கைதி ஒருவரை அன்னிய நாட்டில் அன்னிய காவலர் கைதுசெய்வது என்பது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்பதை சவார்க்கார் அந்த காவலருக்கு எடுத்துரைத்தும் பலனில்லை; பிரிட்டீஷ் காவலர்கள் அவருக்கு பணம் கொடுத்து சரிக்கட்டி விட்டனர். சவார்க்கார் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார்.

சர்வேத விதிகளுக்கு முரணாக இந்திய அரசியல் கைதியை பிரான்சில் வைத்து ஆங்கில காவலர்கள் கைது செய்தது தவறு என்று ஷியாம்ஜி வர்மா தி ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதி மன்றத்தில் முறையிட்டார். அகில உலக அரங்கில் ஏகபோக செல்வாக்குடன் திகழ்ந்த பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு அவ்வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்வதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.

நாசிக் மாவட்ட நீதிமன்றம் சவார்க்கருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனையளித்தது தம் 28-ஆம் வயதில் அந்தமான் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள சிறைக் காவலர் “ஐம்பது வருடத் தண்டனையா?’ என்று ஆச்சரியப் பட்டபோது உடனே சவார்க்கார் ‘அவ்வளவு காலத்திற்கு இந்த அரசு நீடிக்குமா?’ என்று பதிலளித்தார். 1937-ல் மாநிலங்களில் காங்கிரஸ் அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்றதும் சவார்க்கார் 26 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலை பெற்றார், அதன்பின் அவர் இந்து மகா சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1966ல் அவர் இறக்கும் வரை அச்சபை லட்சியங்களுக் காக தொடர்ந்து பணியாற்றினார்.

மதன்லால் திங்க்ரா :

சர். கர்சான் வைலி (Curzon wyle) என்ற ஆங்கில அதிகாரி லண்டன் இந்திய இல்லத்து மாணவர்களின் நடவடிக்கைகளை ஒற்றறிந்து அரசுக்கு அறிவித்து வந்தார். அவரது செயல்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய இளைஞர்களுக்கு இடையூறளித்தன. எனவே மதன்லால திங்க்ரா என்ற பஞ்சாப் இளைஞர் அவரைத் தீர்த்துக்கட்டதிட்டம் தீட்டினார்.அவருக்கு  சவார்க்காரும் உறுதுணணயாய் இருந்தார். எனவே 1909 ஜூலை 1-ம் நாள் லண்டன் இம்பீரியல் பள்ளியில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு வைலி வந்திருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். திங்க்ரா அந்த இடத்திலே கைது செய்யப்பட்டார்; அப்போது அவரது பையிலிருந்து, ஒரு கடிதம் எடுக்கப்பட்டது; அதில் அவர் இந்திய புரட்சியாளர்களுக்கு, நாடு கடத்தும் தண்டனையும் தூக்குத் தண்டனையும் கொடுத்ததற்குப் பழிதீர்க்கும் வகையில் இக்காரியத்தைச் செய்ததாகவும், தான் இறந்தாலும் மீண்டும் இந்திய தாயிடமே வந்து அவள் விடுதலை பெறும் வரை இத்தகைய காரியங்களைச் செய்து கொண்டேயிருப்பேன் என்று எழுதியிருந் தார்.

விக்காஜிகாமா :

வெளிநாட்டில் ஷியாம்ஜி வர்மாவின் புரட்சி செல்வாக்கு வட்டத்திற்குட்பட்டவர்களுள் விக்காஜி காமா அம்மையாரும் ஒருவர். இவர் ‘சோஷியாலஜிஸ்ட்’ இதழ் வெளிவருவதற்கு ஷியாம்ஜிக்கு உறுதுணையாயிருந்தார். 1907 ல் ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்டில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்டுகள் மாநாட்டில் காமாவும் ,ராணா என்பவரும் கலந்து கொண்டனர் இம்மாநாட்டில் காமா அம்மையார் இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்டார். இந்தியாவிற்கென முதன்முதலில் தேசியக் கொடியை ஏற்றிய பெருமை காமா அம்மையாருடையதே இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சி தொடர்வது இந்திய நலன்களுக்கு தீங்கு பயக்கக் கூடியது. எனவே அன்னிய ஆதிக்கத்தை ஒழிக்கும் இந்தியர்களின் பணிக்கு விடுதலையை விரும்பும் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் அம்மாநாட்டில் முன்மொழிந்தார். முதன்முதலில் ஒரு சர்வதேச மாநாட்டில் இந்திய சுதந்திரம் பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வந்த பெருமையும் அவருடையதே ஆகும்.

மறு ஆண்டில் (1908) லண்டன் காக்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அன்னியப் பொருள் புறக்கணிப்பு பற்றிய தீர்மானத்தையும் முன்மொழிந்தார். இம்மாநாட்டில் லாலா லஜபதிராயும், பிபின் சந்திரபாலும் கலந்து கொண்டனர். 1914-ல் உலகப்போர் தொடங்கவும் அவரை ஒரு தீவிற்கு  நாடு கடத்தினார்கள். ஏறத்தாழ முப்பது ஆண்டு காலமாக லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களில் இந்திய விடுதலை பற்றிய கருத்தைப் பரப்பி வந்து அவர் 1936-ல் இந்தியா திரும்பினார். மறு ஆண்டில் அவர் காலமானார்

வங்காளத்தில் புரட்சி இயக்கம்

வங்கப் பிரிவினை வங்காள மாநிலத்தையே ஒரு புரட்சிக் கிடங்காக மாற்றிவிட்டதென்றால் அது மிகையன்று.

பெரும் பான்மையான மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அப் பிரிவிணைய கர்சான் பிரயு நடத்திய முறை தேசிய இள உள்ளங்களை எரிமலையாக்கியது .புதிய மற்றும் அவரது பல்கலைக் கழகச் சட்டம், கல்கத்தா மாநகராட்சி சட்டம் போன்ற பிற் போக்கான சட்டங்களும், இந்தியர்களைப் பற்றிய இழிவான கருத்தும் வெறுப்பையூட்டின. புதிய வங்காள ஆளுநர் ஃபுல்லரின் அடக்குமுறைச் சட்டங்களும் மிதவாதிகளைத் தீவிர வாதிகளாகவும் தீவிரவாதிகளை புரட்சியாளர்களாகவும் மாற்றியது .பரிசல் என்ற இடத்தில் மக்கள் பேரணியை கலைத்த விதமும், சுரேந்திரநாத் பாணர்ஜியை கைது செய்ததும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் நடத்திய சுதேசி இயக்கமும், அன்னியப் பொருள் புறக் கணிப்பும் தேசிய உணர்வைக் கிளறின .எல்லாவற்றிற்கும் மேலாக, பரிந்திரகுமார் கோஷ், பூபேந்திரநாத்தத் ஆகியோரால் வெளியிடப்பட்ட “யுகாந்தர்’ என்ற இதழும், அரவிந்தரின் ‘வந்தேமாதரம்’ இதழும் பிபின் சந்திரபாலின் ‘நியூ இந்தியாவும்” புரட்சிக் கருத்துக்களைப் பரப்பின. எனவே 1905 லிருந்து 1910 வரை ஐந்தாண்டு காலம் வங்காள இளைஞர்கள், வன்முறை, படுகொலை, வெடிகுண்டு வீச்சு மூலம் தங்கள் புரட்சிக் ருத்துக்களை வெளிப்படுத்தினர்.

அனுசீலன் சமிதி :

மராத்தியப் பகுதியில் ஒரு அபினவ் பாரத் என்றால் வங்காளத்தில் ஒரு அனுசீலன் சமிதி புரட்சி இயக்கத்தின் மையமாக விளங்கியது. டாக்காவில் இதனை நிறுவியவர் புலின் பிஹாரிதாஸ். கல்கத்தாவில் நிறுவியவர் பரிந்திரகுமார் கோஷ். இவர் அரவிந்த கோஷின் சகோதரர் ஆவர். இவரும் பூபேந்திரநாத்தத் என்பாரும் (விவேகானந்தரின் இளைய சகோதரர்) இணைந்து, ‘யுகாந்தர்’ என்ற புரட்சி இதழை நடத்தினர். சர் லாரன்ஸ் ஜெங்கின்ஸ் கூறியபடி அவ்விதழ், ‘பிரிட்டிஷ் இனத்தின் மீது வெறுப்பு அனலை வீசின; ஒவ்வொரு வரியிலும் புரட்சிக்கனலை உமிழ்ந்தன; எவ்வாறு புரட்சியை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுக் காட்டின”.

அனுசீலன் சமிதி வங்காளமெங்கிலும் 114 கிளைகளையும், 8400 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. அதன் உறுப்பினர்கள் இரு உறுதி மொழி எடுக்க வேண்டும்.

  • சமிதி தலைவருக்கு மறுப்பின்றி கீழ்படிவது.

  • எல்லா குடும்பத் தொடர்புகளையும் விட்டுவிடுவது

 இது உடற்பயிற்சியையும் சுதேசி இயக்கத்தையும் பரப்பினாலும் பிரிட்டீஷ் ஆதிக்கத்தை ஆயுதப் புரட்சியின் மூலம் அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருநதது ஹேம் தாஸ் என்பாரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வெடிகுண்டு செய்யும் நுட்பத்தை கற்றுவரச் செய்தது. அதன்பின் வங்காளத்தில் ஒரு வெடிகுண்டு தொழிற்சாலை இரகசியமாக இயங்கியது இதன்  விளைவாக பல வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.

  1. 1908 டிசம்பர் 6 ல் வங்காள ஆளுனரை ஏற்றிவந்த ரயில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.ஆளுனர் நூலிழையில் தப்பினார். இதன் தொடர்பாக பரிந்திர குமார் கோஷ் கைது செய்யப்பட்டார்.

  2. 1908 டிசம்பர் 23 ல் முன்னாள் மாவட்ட நீதிபதியான ஆலன் என்பவரை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது.ஆனால் அவர் காயத்துடன் தப்பித்துக் கொண்டார்

  3. வங்கப் பிரிவினை காலத்தில் சுதேசிப் போராட்ட தொண்டர்களுக்கு கடுமையான தண்டனை விதித்த மாநில நீதிபதி கிங்ஸ் போர்டு புரட்சியாளர்களின் இலக்கு ஆனதில் வியப்பேதும் இல்லை. பிபின் சந்திர பாலுக்கு எதிராகச் சாட்சி சொல்லமாட்டேன் எனச் சொன்ன அரவிந்தருக்கு நீதிமன்றத்தை அவமதித்தார் என்று கூறி அவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தவர் நீதிபதி கிங்ஸ் போர்டு. எனவே அவரை கொல்வதற்கு குதிராம் போஸ், பிரபுல்லா சாக்கி என்ற இரு புரட்சியாளர்கள் அனுப்பப்பட்டனர். கிங்ஸ் போர்டு வண்டி வருவதைக் கண்ட அவர்களிலிருவரும் அதனுள் அவர்தான் இருப்பார் என்று வெடிகுண்டு வீசினர். ஆனால் வண்டியினுள் திருமதி கென்னடு என்பாரும் அவரது மகளும் இருந்தனர் . அவர்கள் வெடிகுண்டு வீச்சால் கொல்லப்பட்டனர்.உடனே பிரபுல்லா தன்னைச் சுட்டுகொண்டார். குதிராம் போஸ் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார். குதிராமின் துனிச்சலைப் பாராட்டி திலகர் கேசரியில் எழுதியதற்காகத்தான் ஆறாண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டார். அதே காரியத்தைச் செய்த மற்றொரு ஆசிரியரான பராஞ்சேசியும் தண்டிக்கப்பட்டார்.

அலிப்பூர் சதி வழக்கு

போலிசார் மிரரிபாக் கூர் சாலையில் பல வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன் தொடர்பாக 34 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களுள் முக்கியமானவர்கள் அரவிந்தகோஷ், பூபேந்திரநாத்தத், ஹேம் சந்திரதாஸ், நரேந்தர், கோசைன், கனைலால் ஆகியோராவர். இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு தான் அலிப்பூர் சதி வழக்கு எனப்பட்டது, இவ்வழக்கில் நரேந்தர் கோசைன் அப்ரூவலாக மாறினான். அதனால் ஆத்திரமடைந்த பிற புரட்சியாளர்களான கனைலாலும் சத்யேந்தரும் கோசைனைச் சிறைச்சாலையிலே சுட்டுக் கொன்றனர். அந்த இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில் கூட கனைலால் சிறிதும் கவலையின்றி உற்சாகமாக இருந்தது அனைவரையும் நெகிழச் செய்தது. கனைலால் மாபெரும் தியாகியாகப் போற்றப்பட்டார்.

அலிப்பூர் சதிவழக்கில் சம்பந்தப்பட்ட பரிந்திரகுமார் கோஷ் மற்றும் பலருக்கு பல்வேறு கால சிறைத் தண்டனையளிக்கப்பட்டது அரவிந்த் கோஷ் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கிற்குப் பின்னும் படுகொலைகள் தொடர்ந்தன. குதிராம் போசை கைது செய்த போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தனால் கொல்லப்பட்டார். அலிபூர் சதி வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராயிருந்த பின்வர்ஸ் என்பாரும் கொலை செய்யப்பட்டார்.

டில்லி சதி வழக்கு :

1911-ல் டில்லி தர்பாரில் வங்கப் பிரிவினை ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கட்டது. தலைநகர் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. 1912 டிசம்பர் 12 ல் அரசுப் பிரதிநிதி ஹார்டிஞ்ச் பிரபு புதிய தலைநகராகிய டில்லியினுள் ஆடம்பரப்பவனியாக வந்து நுழையும் போது அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. சொற்ப காயத்துடன் ஹார்டிஞ்ச் தப்பித்துக் கொண்டார். ஆனால் அவரது மெய்காவலர் உயிரிழந்தார். புரட்சியாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய அரசு தீவிர முயற்சி எடுத்தது. அதன் விளைவாக அமிர்சந்த், பால் முகுந்த், பெசந்த் குமார், ஆவாட் பிஹாரி ஆகியோர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முதலில்குறிப்பிட்ட நால்வரும் 1915 மே 8ல் தூக்கிலிடப்பட்டனர்.இந்த குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நபர்ராஷ் பிஹாரி போஸ், அவரை போலிசாரால் கைது செய்ய இயலவில்லை. அவர் இந்தியாவிலிருந்து தப்பி ஜப்பானுக்கு சென்று விட்டார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்திய விடுதலைப் போரை கிழக்காசியாவில் தொடங்கிய வீரர் இந்த ராஷ்பிஹாரி போஸ் ஆவர்.

காதர் கட்சி  (Ghadar party)

அடிமை நாடொன்றிலிருந்து வெளிநாடுகளுக்கு குடிபுகுவோர் பல இடையூறுகள் அனுபவிக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள் அவ்வாறு பல தொல்லைகள் எதிர்நோக்க வேண்டியதிருந்தது. ஒரு சுதந்திர நாட்டு குடிமகன் என்ற கெளரவத்தோடு வெளிநாடுகளில் குடியேறினால்தான் சுயமரியாதையுடன் வாழமுடியும் என்பதை அவர்கள் அனுபவரூபமாகக் கண்டனர். எனவே இந்தியாவின் விடுதலையை இந்தியாவில் உள்ளவர்களைவிட வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்கள் மிக ஆர்வமாக எதிர்நோக்கினர். அந்த இலட்சியத்திற்காக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் உருவாக்கிய அமைப்பே காதர் கட்சியாகும். அதனை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் லாலா ஹர்தயாள் ஆவார். அவர் தான் அக்கட்சியின் செயலாளர், மற்றும் பாபா சோகன் சிங் பாக்னா, கெஷார் சிங், காஷிராம் ஆகியோர் முறையே தலைவர், உபதலைவர், கருவூலர் ஆகப்பொறுப்பேற்றனர். அவர்கள் ‘காதர்’ என்ற புரட்சி இதழை வெளியிட்டனர்.

1914 பிப்ரவரியில் ஸ்டாக்டன் என்ற இடத்தில் அமெரிக்காவாழ் இந்தியர்கள் அனைவரும் கூடி இந்திய விடு தலைக்குப் பாடுபட உறுதிகொண்டனர். எனவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலின் பேரில் அமெரிக்க அரசு காதர் கட்சியினருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது லாலா ஹர்தயாள் கைது செய்யப்பட்டார். ஆயிரம் டாலர் ஜாமின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கட்டாயப் படுத்தப்பட்டார். ஹர்தயாள், காரல் மார்க்சின் அறிவியல் சோஷலிச கோட்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டினார். ஜெர்மன் தூதர்களுடன் தொடர்பு கொண்டு இந்தியப் புரட்சியாளர்களுக்கு உதவ திட்டமிட்டது குறிப்பிடத் தக்கது.

கோமகதா மாரு (Komakata Maru) :

பிரிட்டீஷ் டொமினியனான கனடா அரசும் அங்கு குடியேறியுள்ள இந்தியர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது. 1913 ல் கனடாவின் மேற்குக் கரைப் பகுதியில் நாலாயிரம் இந்தியர்களுக்கு மேல் குடியேறிருந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் சீக்கியர்கள். இந்தியர்கள் குடியேறுவதை விரும்பாத கனடிய அரசு அவர்களை மத்திய அமெரிக்காவில் உள்ள ஹாண்டுராஸ் என்ற பகுதியில் குடியமர்த்தத் திட்டமிட்டது மேலும் இந்தியர்கள் கனடாவில் குடியேறுவதைத் தடுக்கும் நோக்குடன், கல்கத்தாவிலிருந்து நேரடியாக வரும் இந்தியர்களையே கனடாவில் குடியேற அனுமதிக் கும் என்று கூறும் சட்டத்தை இயற்றியது அக்காலத்தில் கல்கத்தாவிலிருந்து கனடாவிற்கு நேரடி கப்பல் போக்குவரத்து கிடையாது என்ற தைரியத்தில்தான் கனடிய அரசு அத்தகைய சட்டத்தை இயற்றியது பொதுவாக அக்காலத்தில் கனடாவிற்கு குடியேற விரும்பும் இந்தியர்கள் ஹாங்காங், சிங்கப்பூர் ஷாங்கை துறை முகங்களிலிருந்துதான் புறப்பட்டுச் சென்றனர். புதிய குடியேற்றச் சட்டப்படி இனி அத்துறைமுகங்களிலிருந்து வரும் இந்தியர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்தத் தடையை முறியடிக்க பாபா குர்தத் சிங் என்பவர் குருநாதனக் கப்பல் போக்குவரத்து கம்பெனியைத் தொடங்கி, “கோமகதாமாரு’ என்ற ஜப்பானிய கப்பலை வாடகைக்கு ஏற்பாடு செய்தார். அக்கப்பல் 1914 ஏப்ரல் 4-ல் கல்கத்தாவிலிருந்து 341 சீக்கியர்களையும் 21 முஸ்லிம்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இக்கப்பல் மே 22-ல் கனடாவின் மேற்குக் கரையிலுள்ள வான்கூவர் துறைமுகத்தினருகில் வந்து சேர்ந்தது: தங்கள் நோக்கம் முறியடிக்கப்பட்டு விட்டதைக் கண்டு ஆத்திர மடைந்த கனடிய அரசு அக்கப்பலை வான்கூவர் துறைமுகத்தினுள் அனுமதிக்காததோடு, அதன் பயணிகளையும் கரை இறங்க விடாது தடுத்தது புதிய குடியேற்றச் சட்டத்திற்கேற்ப கல்கத்தாவிலிருந்து நேரடியாக வந்த கோமகதாமாருவை கனடிய அரசு தடுத்து நிறுத்தியது. அதன் இந்திய விரோத மனப்பான்மையை தெளிவாக எடுத்துக் காட்டியது.

கரையிறங்க அனுமதிக்கப்படாத கோமகதாமாரு பயணிகள் குடிநீர், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக் குறையினாலும் பிணியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிறிதுகூட மனிதாபிமானப் பண்பில்லாத கனடிய அரசு அக்கப்பலை அங்கிருந்து வெளியேற்ற இரு போர்க்கப்பலை அனுப்பியது. எனவே வேறு வழி யில்லாமல் இரு மாதம் கனடிய கடலில் தத்தளித்த கோமகதா இந்தியா திரும்பியது. 1914 செப்டம்பர் 26-ல் கல்கத்தாவிற்கு 17 மைல் தொலைவிலுள்ள பட்ஜ்பட்ஜ் துறைமுகத்தை வந்தடைந்தது. பல்லாயிரக்கணக்கான மைல் தொல்லைகளையும் துயரங்களையும் அனுபவித்த கோமகதா மாரு பயணிகளை தாய் நாட்டில் கூட நிம்மதியாக காலடி எடுத்து வைக்க பிரிட்டீஷ் அரசு அனுமதிக்கவில்லை. அப்பயணிகளை புரட்சியாளர்களாகக் கருதி தனியொரு ரயிலில் அவர்களனைவரையும் ஏற்றிச் செல்ல முயன்றது  அதை பயணிகள் எதிர்த்ததால் கலவரம் மூண்டது; அதில் 18 பேர் கொல்லப்பட்டனர். பாபா குருதத் சிங் காயங்களுடன் உயிர்தப்பினார்.

 கோமகாதாமாரு பயணிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கனடிய இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். இந்திய குடியேற்றத்தை மறைமுகமாகத் தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து பாய் பாக் சிங், பாய்வதன் சிங் ஆகியோர் கிளர்ச்சி செய்தனர். காதர் கட்சியினர் பொதுமக்களை ஒன்று திரட்டினர் காதர்’ இதழ் நேரடிப் புரட்சிக்கு மக்களைத் தூண்டியது. அதுகண்ட கனடிய குடியேற்ற அதிகாரி ஹாப்கின்ஸ், பாக்சிங், வதன் சிங் ஆகியோரை பேலாசிங் என்ற இந்தியனை ஏவி கொலை செய்வித்தார். அதனால் ஆத்திரமடைந்த மேவாசிங் என் இந்தியர் ஹாப்கின்சைக் கொன்றார்.

 லாகூர் சதி வழக்கு :

காதர் கட்சியின் புரட்சி முழக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. முதல் உலகப் போர் தொட்ங்கியதும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் முழு கவனமும் ஐரோப்பியப் போர்க்களத்தில் ஈர்க்கப் பட்டிருப்பதைக் கண்ட புரட்சியாளர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் ராணுவப் புரட்சி நடத்தத் திட்ட மிட்டனர். இத்திட்டத்திற்கு உயிர் நாடியாக விளங்கியவர் கர்தார் சிங் என்ற பதினெட்டு வயது இளைஞன், அமெரிக்காவிற் உயர்கல்வி பயில சென்ற கர்தார் சிங் அங்குள்ள காதர் இயக்கத்தின் பிரச்சாரத்தால் தீவிர புரட்சியாளரானார். ‘காதர்’ செய்தித்தாளின் ஆசிரியராகவும் விளங்கினார். முதல் உலகப் போர் தொடங்கியதும் இந்தியா திருப்பி புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்தியப் புரட்சியாளர்களான ராஷ்பிஹாரி போஸ்

சசிந்திர சன்யான்கணேஷ் பிங்லே ஆகியோருடன் தொடர்பு கொண்டார். அவர்கள் 1857-ஆம் ஆண்டு புரட்சியைப் போல் 1915 பெப்ரவரி 21-ல் இந்தியாவெங்கிலும் படை முகாம்களில்உள்ள இந்திய வீரர்களை கிளர்ந்தெழச் செய்யத் திட்டமிட்டனர்

பல்வந்த் சிங், சோகன் சிங், மூலாசிங், பாய் பரமானந்த் ஆகியோர் புரட்சிப் பணியில் பங்கேற்றனர். லாகூர், மீரட், பெனாரஸ், கான்பூர், லக்னெள பைசாபாத் ஆகிய இடங்களில் உள்ள படை முகாம்களின் இந்திய வீரர்களை புரட்சியிலிறங்கத் தூண்டினர். அமிர்தசரஸ், லூதியானா ஆகிய இடங்களில் இரகசியமாக வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டன. இத்திட்டத்திற்கான நிதித் தேவையைப் பூர்த்திசெய்ய பஞ்சாபில் மேகா கிளைக் கருவூலத்தைக் டிக்க முயன்றனர். அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. இரு புரட்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஏழுபேர் தூக்கிலிடப்பட்டனர்.

எனினும் புரட்சியாளர்கள் பெப்ரவரி 21-ஆம் நாள் புரட்சியைத் தொடங்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தோ பரிதாபம், திர்பால்சிங் என்ற துரோகி புரட்சி பற்றிய தகவல்களை அரசிற்கு அறிவித்து விட்டான். புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது லாகூர் சதி வழக்கு போடப்பட்டது. கர்தார் சிங், பிங்லே, ஜகத்சிங் உட்பட 23 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

முதல் உலகப் போரும் ஜெர்மன் உதவியும் :

“எதிரியின் எதிரி, நமது நன்றின் என்ற கொள்கைப்படி இந்தியப் புரட்சியாளர்கள் தங்கள் எதிரி பிரிட்டனின் எதிரியான ஜெர்மனி தங்கள் நண்பன் என்று கருதினர். பிரிட்டனை எதிர்த்துப் போராடிய ஜெர்மனியும் இந்தியப் புரட்சியாளர்களை அவ்வாறே கருதியது எனவே வீரேந்திரநாத், சட்டோபாத்யாயா ,அபினாஷ்பாட்டாச்சாரியா ஆகிய புரட்சியாளர்கள் பெர்லினில் இந்திய சுதந்திரக் குழுவை நிறுவினர். அப்போது சுவிட்ஸர்லாந் தில் உள்ள சூரிச் நகரில் நிறுவப்பட்ட  ’சர்வதேச இந்திய ஆதரவுக் குழு’ தலைவரான செண்பகராமன் பிள்ளை பெர்லினுக்கு வந்து ஜெர்மன் அரசு ஆதரவுடன் இந்திய தேசியக்கட்சியை நிறுவினர். இக்கட்சியில் லாலாஹர்தயாள், பர்கத்துல்லா தாரக் நாத் தாஸ் ஆகியோர் சேர்ந்தனர். ஜெர்மானியரால் கைது செய்யப்பட்ட இந்தியப் போர் வீரர்களை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியில் பர்க்கத்துல்லா ஈடுபட்டார்.

எம்.என்.ராய் என்பார் ஷாங்கையில் உள்ள  ஜெர்மன் தூதர் மூலமாக படேவியாவிலிருந்து எஸ் எஸ். மாவெரிக் என்ற ஜெர்மன் கப்பலில் 30000 துப்பாக்கி ளும் அதற்குரிய குண்டுகளும் மற்றும் ரூபாய் இரண்டு லட்சமும் கொண்டு வரத் திட்டமிட்டார். இது வங்காளத்தின் சுந்தரவனக் காடுகளில் உள்ள ராய் மங்கல் என்ற இடத்தில் இரகசியமாக இறக்கப்பட்டு இந்தியப் புரட்சியாளர்களிடை விநியோகிப்பட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இது எப்படியோ அரசிற்கு தெரிந்து விட்டது. எனவே மாவெரிக் கப்பல் ஆயுதங்கள் இந்தியப் புரட்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை . எனினும் மனந்தளராத எம். என் ராய் மீண்டும் ஷாங்கை சென்று ஜெர்மன் தூதரைச் சந்தித்து மற்றுமிரு கப்பலில் ஆயுதங்கள் அனுப்பத்திட்டமிட்டார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

ராஜாமகேந்திர பிரதாப் என்பார் ஜெர்மன் ஹெய்சரின் அனுமதியுடனும், செய்திகளுடனும் துருக்கி சென்று அங்கு அன்வர் பாஷா கொடுத்த கடிதங்களுடன் காபூல் சென்றடைந்தார் அங்கு ஆப்கானிய அமிர் ஹபிபுல்லா உதவியுடன் இந்திய சுதந்திர அரசு ஒன்றை நிறுவி இந்தியாவினுள் புரட்சி இயக்கங்களை வலுப்படுத்த முயன்றார். இந்த தற்காலிக சுதந்திர அரசு 1915, டிசம்பர் 1-ஆம் நாள் காபூலில் நிறுவப்பட்டது. ராஜா மகேந்திர பிரதாப் குடியரசுத் தலைவராகவும் மெளலானா பரக்கத்துல்லா பிரதம அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் முதல் உலகப் போர் முடிந்தபின் இந்தியப் புரட்சியாளர்கள் ஜெர்மனியை விட்டுவிட்டு சோவியத் ரஷியாவின் உதவியை நாடத் தொடங்கினர் அவர்கள் ரஷியப் புரட்சியிலிருந்துதான் உள்ளுணர்வு பெற்றனர்.

காக்கோரி சதி :

முதல் உலகப்போர் பிரிட்டீஷாரின் வெற்றியில் முடிவுற்றாலும் இந்தியப் புரட்சியாளர்கள் மனந்தளரவில்லை. மீண்டும் சசிந்திரநாத் சன்யால், ராம் பிரசாத் ஆகியோர் பிற புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு “இந்துஸ்தான் குடியரசு கழகத்தை’ நிறுவினர். இந்திய ஐக்கிய நாடுகளின் புரட்சிக் குடியரசை நிறுவுவதை தங்கள் நோக்கமாகக் கொண்டனர். அதற்கு ரஷியப் புரட்சியாளர்களைப் போல் வன்முறையிலும் ஆயுதப் புரட்சியிலும் நம்பிக் வைத்தனர்.

முதலில் ஆயுதங்கள் வாங்குவதற்கு அரசு ரயில் மூலம் அனுப்பும் பணத்தை கொள்ளையடிக்க முடிவுசெய்தனர். அதன்படி ரயில் காக்கோரி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு புரட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது இந்த துணிகர கொள்ளை கண்டு அதிர்ச்சியுற்ற அரசு தீவிரமாக இயங்கியது. அதன் விளைவாக புரட்சியாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டனர். காக்கோரி சதி வழக்கில் ராம் பிரசாத் பிஸ்மில்சந்திரபான், குப்தா ரோஷன் சிங் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர் மற்றும் பலர் பலவருட சிறை தண்டனையளிக்கப்பட்டனர்.

பகத்சிங்கும் இக்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகமும் :

தூக்குத் தண்டனைகளும் நாடு கடத்தலும் சிறை வாசமும் புரட்சியாளர்களின் சுதந்திர தாகத்தை தணித்திட இயலவில்லை; அரசு அடுக்கடுக்காக அடக்குமுறைகளை அள்ளிவீசினாலும் அவ்வப்போது இரகசிய புரட்சி இயக்கங்கள் தோன்றிக் கொண்டு தானிருந்தது. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களுள் ஒன்று ‘நவஜவான் பாரத் சபா’ ஆகும். இது 1925 ல் லாகூரில் பகத்சிங் பகவதிசரண் ஆகிய இளைஞர்களால் தோற்றுவிக்கப் பட்டது. விரைவில் தேசிய உணர்வும் சோஷலிசக் கருத்துக்களில் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் பலர் இச்சபாவில் சேர்ந்தனர். 1915 ல் முதல் லாகூர் சதிவழகு விசாரணையில் தூக்கிலிடப்பட்ட கார்தார் சிங் நினைவு நாளை கொண்டாடி புரட்சிக் கருத்துக்களைப் பரப்பியது.

புதியக் கட்சி அமைப்பு :

நாடெங்கும் உள்ள புரட்சியாளர்களை ஒரே இயக்கமாக  ஒருங்கினைக்கு ம் பணியை இச்சபா மேற்கொண்டது அதன் விளைவாக 1928 செப்டம்பர் 8-ல் டில்லியில் அனைத்துப் புரட்சியாளர்களும் கலந்து கொண்ட மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் பகத்சிங், சுகதேவ், குண்டன்லால், மகிந்தரநாத் போன், ச ந் திர சேகர ஆசாத், சுரேந்திநாத் பாண்டேயஷ்பால் பதுகேஸ்வர் போன்ற புரட்சியாளர்கள் கலந்து கொண்டனர். தங்கள் இயக்கத்தை அகில இந்திய ரீதியில் மாற்றியமைத்து, அதற்கு “இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுக் கழகம்” என்று புதியதொரு பெயர் சூட்டினர். மாநில அமைப்பாளர்கள், கொள்கை பரப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்” குண்டன்லால் மத்திய குழு தலைவராகவும் சந்திர சேகர் ஆசாத் தலைமைத் தளபதியாகவும் நியமிக்கப் பட்டனர்

இக்கட்சியின் நோக்கங்கள் :

  • இந்தியாவில் ஒரு குடியரசு நிறுவவேண்டும்.

  • சோசலிச கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்

  • இந்த இரு லட்சியங்களையும் அடைய இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி ஆயுதப் புரட்சி நடத்த வேண்டும்.

லஜபதிராய் மரணமும் அதன் விளைவும்

இச்சமயத்தில் சைமன் குழு இந்தியா வருகை புரிந்தது. காங்கிரஸ் உட்பட அனைத்து  தேசியக் கட்சிகளும் அக்குழுவை புறக்கணித்தனர். அக்குழு சென்ற இடமெல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ‘சைமனே திரும்பிப்போ’ என்ற குரல்  நாடெங்கும் எதிரொலித்தது. லாகூருக்கு 1928 அக்டோபர் 20ல் அக்குழு வருகை புரிந்தபோது பழம்பெரும் தேசபக்தர் லாலா லஜபதி ராய்  தலைமையில் அதற்கு எதிராக கருப்புக்கொடி ‘ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் கூட்டத்தின் முன்னணியில் நின்று லஜபதிராய் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசு மிருகத்தனமான தாக்குதல் தொடுத்தது; போலிஸ் திகாரி சாண்டர்ஸ் முன்னணியில் நின்ற லஜபதி ராய் மீது அவரது மார்பிலும் , தலையிலும் சரமாரியாக அடித்தான் லஜபதிராய் 1928 நவம்பர் 17ல் மரணமடைந்தார்.

மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட வயது முதிர்ந்த மாபெரும்  தலைவருக்கு நேர்ந்த இந்த மரணம்  நாடெங்கும் அதிர்ச்சி அலைகளைப்  பரப்பியது. இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுக் கட்சியினர் இந்த கொடுமையான மரணத்தை தேசிய இழிவாகக் கருதினர்.எனவே அவரது மரணத்திற்கு காரணமான சாண்டர்சை கொன்று தீர்க்க முடிவு கட்டினர். 1928 டிசம்பர் 17-ல் அப்போலிஸ் அதிகாரி மாலை 4 மணிக்குதம் அலுவலகத்திற்கு வரும்போது பகத்சிங் சுகதேவ் ஆகிய இருவரும் அவரைச் சுட்டுக் கொன்றனர்.ஐந்து நாட்களுக்குப்பின் இக்கொலையை நியாயப்படுத்தி இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுக் கட்சியின் சார்பில் லாகூரில் பல சுவரொட்டிகள் காணப்பட்டன.

மத்திய சட்ட மன்றத்தில் வெடிகுண்டு :

1929 ஏப்ரல் 8 ல் மத்திய சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்குப் பின் பார்வை யாளர் பகுதியிலிருந்த பகத்சிங்கும் பதுகேஸ்வரும் வெடிகுண்டு வீசினர்  யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அக்குண்டு வீசப்படவில்லை; அவர்களே பின்னர் கூறியபடி, இங்கிலாந்தை கனவுலகிலிருந்து எழுப்புவதற்கு வெடிகுண்டு தேவைப்பட்டது. இந்திய வேதனையை எடுத்தியம்ப இயலாதோரின் சார்பில் ஆட்சேபனையைத் தெரிவிப்பதற்கு இக்குண்டு விசப்பட்டது’ அதன்பின் புரட்சியைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்களை சபையில் வீசி விட்டு தப்பியோடாது அங்கேயே நின்றனர். எனவே எளிதில் கைது செய்யப்பட்டனர். துண்டுப் பிரசுரத்தில் ‘செவிடர்களுக்கு உரைப்பதற்கு வெடிகுண்டு தேவைப்படுகிறது” என்றும் “இன்குலாப் – ஜிந்தாபாத்’ (புரட்சி நீடுழி வாழ்க) என்றும் குறிப்பிட்டிருந்தது

இரண்டாவது லாகூர் சதிவழக்கு

விரைவில் போலிஸ் துறையினர் புரட்சி இயக்கத்தைச் சார்ந்த பலரைக் கைது செய்து விசாரணைக்கு ஏற்பாடு செய்தனர், அவர்களுள் சுகதேவ் ராஜகுரு, குண்டன்லால் மகாவிர் திவாரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் .1930 அக்டோபர் 7-ல் லாகூர் நீதிமன்றம் பகத்சிங், ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையளித்தது. ஏற்கனவே டில்லி நீதிமன்றம் பதுகேஸ்வர் தத்திற்கு நாடுகடத்தல் தண்டனை அளித்திருந்தது விஜய்குமார் சின்ஹா, மஹாவீர் திவாரி ஆகியோரும் ஆயுள் தண்டனையளிக்கப் பட்டு நாடுகடத்தப்பட்டனர். குண்டன்லால் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.

தண்டனை கிறைவேற்றம்:

தண்டனை பற்றிய விவரங்கள் வெளிவந்ததும் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது.ஆனால் பயனில்லை. மூன்று இளைஞர்களும் (பகத்சிங், சுகதேவ், ராஜகுரு) 1937 மார்ச் 23 ஆம் நாள் மாலை 7.30க்கு லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். உடனே அன்றிரவே அவர்கள் சட்லஜ் ஆற்றங்கரையில் தகனம் செய்து விட்டன்ர். செய்தி அறிந்த மக்கள் திரளாக அவ்விடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி முறைப்படி தகனம் செய்தனர்.

அவர்கள் உடலை உறவினர்களிடம் முறையாக  ஒப்படைக்காமல் இரவோடிரவாக அரசு முயன்றதற்கு ஒரு காரணம் உண்டு.பகத்சிங்கும் மற்றும் அவரது புரட்சியாளர்களும் டில்லி சிறையிலிருக்கும் போது தங்களை அரசியல் கைதிகளாக நடத்தக் கோரி உண்ணாவிரதமிருந்தனர். அதனைக் கேள்வியுற்ற லாகூர் சிறையிலிருந்த புரட்சியாளர்களும் உண்னாவிரதமிருந்தனர். அது கண்ட அரசு புரட்சியாளர்களின் கோரிக்கைக்கு ஓரளவு இரங்கி வந்தது. எனவே ஜதீந்தரதாஸ் என்ற இளைஞர் தவிர அனைவரும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். ஆனால் ஜதீந்தரதாஸ் மட்டும் 63  நாட்கள் உண்னாவிரதமிருந்து உயிர் துறந்தார். இவரின் மரனம் நாடெங்கிலும் அனுதாப அலையோடு , ஆவேசத்தையும் ஊட்டியது.

அவரது உடல் லாகூரிலிந்து கல்கத்தாவிற்கு தனி ரயிலில் கொண்டு வரப்பட்டது. வழிநெடுக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்ச்சி அரசிற்கு எதிரான வெறுப்பை அதிகரித்து வன்முறை என்னத்தை தோற்றுவித்தது. எனவே தான் அரசு பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இரகசியாமாக தகனம் செய்ய முயன்றது.

விளைவுகள்:

 நாட்டு விடுதலைக்காக தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து தூக்கு கயிற்றை முத்தமிட்ட புரட்சியாளர்கள் மலர் தியாகம் செய்தாலும் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்கள் செய்த்தது போல் , நாட்டை அவை இவ்வளவு தூரம் உலுக்கியதில்லை. பகத்சிங்கிற்கு தூக்குதண்டனை விதித்த நேரத்தில் தான் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்திற்கு முன் காந்தியடிகள் பகவத்சிங்கிற்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் என கண்டிப்பான நிபந்தனை விதித்திருந்தால் ஒருவேளை பகவத் சிங்கை  காப்பாற்றி இருக்கலாம் என்று கருதுவோருமுள்ளனர். ஆனால் காந்தியடிகள் அதற்காக பெருமுயற்சி எடுத்தார் என சீதாராமையா தனது காங்கிரஸ் வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி- இர்வின் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்காக கூடிய கராச்சி காங்கிரசிற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் தான் பகவத் சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலப்பட்டனர். எனவே கராச்சி காங்கிரஸ் மானாட்டிற்கு வருகை புரிந்த காந்தியடிகளுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. மாநாடும் வழக்கமான உற்சாகத்துடன் இல்லாமல் சோகமாகவே காணப்பட்டது.

சந்திரசேகர ஆசாத்

பகத்சிங் உயிர்த்தியாகத்திற்குப் பின்னும் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுக் கட்சியை தொடர்ந்து புரட்சிப்பாதையில் செலுத்திய பெருமை சந்திர சேகர் ஆசாத்தையே சாரும், காகோரி ரெயில் கொள்ளையில் பங்கு பெற்ற ஆசாத் அவ்வழக்கில் போலிசாரிடம் சிக்காது தப்பித்துக் கொண்டார். பின் பகத்சிங்குடன் இணைந்து இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுக் கட்சியை நிறுவினார். அக்கட்சியின் படைத் தளபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். சாண்டர்ஸை சுட்டுக் கொல்லும்போது பகத்சிங்கிற்குத் துணையாய் இருந்தார் பகத்சிங் சிறையில் அடைப்பட்டிருக்கும் போது அவரை விடுவிக்க துணிகர முயற்சி ஒன்றினை மேற்கொண்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பகத்சிங்கின் மரணத்திற்குப் பின் யஷ்பால், பகவதி சரண் சுசிலா தேவி, துர்க்கா தேவி போன்ற புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து  டில்லியை தலமையிடமாக க் கொண்டுசெயல்படத் தொடங்கினர்.

1929 டிசம்பர் 23-ல் அரசப் பிரதிநிதி இர்வின் செல்லவிருந்த ரயிலைத் தகர்க்க திட்டமிட்டனர். திட்டப்படி அவரது ரெயில் நைசாமுதீன் நிலையத்திற்கருகில் வரும்போது குண்டுவெடித்தது. உணவருந்தும் வண்டி நொறுங்கியது. ஆனால் இர்வின் தப்பித்து விட்டார். இந்நிகழ்ச்சிக்கு சரியாக ஓராண்டிற்குப் பின் ஹரி கிஷன் என்ற புரட்சியாளர் பஞ்சாப் ஆளுநரைச் சுட்டுக் கொல்ல முயன்றார்; ஆளுநர் லேசான காயங்களுடன் தப்பித்தார்.

மேலும் புரட்சித் திட்டங்களை வகுக்க ஆஸாத் , யாஷ்பால் , சுரேந்திர பாண்டே ஆகியோர் அலகாபாத்தில் கூடினர். 1931 பிப்ரவரி 27-ல்  ஆஸாத் ஆல்பிரட் பார்க்கில் தங்கியிருக்கும்போது போலிசார் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டனர். போலிசாருக்கும் ஆஸாத்திற்குமிடையில் துப்பாக்கிப் போர் மூண்டது. ஆஸாத் பல துப்பாக்கி குண்டுகளுக்கு இலக்கானார். தம்மிடமுள்ள தோட்டா தீர்ந்து வருவதைக்கண்ட ஆஸாத் கடைசி தோட்டாவால் தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டார்.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு கொள்ளை

மகாத்மா காந்தி தமது புகழ்பெற்ற தண்டியாத்திரையை அஹிம்சா முறையில் நடத்திக்கொண்டிருந்த போது 1930 ஏப்ரல்18-ல் ‘சூரியா சென்’ என்ற புரட்சியாளர், ஆறு இளைஞர்களை உடனழைத்துச் சென்று சிட்டகாங் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தார்; சில காவலர்களும் ஆங்கில அதிகாரியொருவரும் கொல்லப்பட்டனர். புரட்சியாளரிடம் ஏராளமான படைக்கலன்களும் வெடிமருந்தும் சிக்கின. அவற்றை ஜலலாபாத் குன்று பகுதிகளில் பதுக்கி னவத்தனர். எப்படியோ அதிகாரிகள் புரட்சியாளர்கள் இருந்த இடத்தை தெரிந்து கொண்டு அதனைச் சூழ்ந்து தாக்கினர். புரட்சியாளர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கினர். அத்தாக்குதலில் 160 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அரசு அதிகாரி ஒருவர் 64 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினார். இத்தாக்குதலுக்குப் பின் புரட்சியாளர்கள் சந்திரநாஹாருக்குப் பின் வாங்கினர். அங்குள்ள பிரெஞ்சு அதிகாரிகள் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்ததால் புரட்சியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட னர். ஆனால் சூரியா சென் தப்பிச் சென்று விட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். இரு ஆண்டுகளுக்குப் பின் சூரியா சென் கைது செய்யப்பட்டு 1934 ஜனவரி 12-ல் தூக்கிலிடப்பட்டார். அந்த ஆண்டு மட்டும் (1930) பத்து அரசி அதிகாரிகள் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். ஆனால் 51 புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

மீரட் சதி வழக்கு :

ரஷியாவில் உள்ள காமின்டர்ன் என்ற அகில உலக கம்யூனிச நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் ஆயுதப் புரட்சி நடத்தி சோவியத் குடியரசுகளை ரஷியாவின் கட்டுப்பாட்டில் நிறுவ சதி செய்ததாக 1920 மார்ச்சில் 31பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு மீரட் சதி வழக்கு எனப்படுகிறது. அதில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையுடன் நாடு கடத்தலும் மற்றவர்களுக்கு பல வருட சிறைத் தண்டனை களும் விதிக்கப்பட்டன.

திறனாய்வு :

பொதுவாக உலகில் தேசிய விடுதலை இயக்கங்கள் வன்முறைப் போராட்ட வழி முறைகளையே பின்பற்றி வெற்றி பெற்றுள்ளன. அமெரிக்க விடுதலைப் போர், லத்தீன் அமெரிக்க  நாடுகளின் விடுதலைப் போர், கிரீஸ் மற்றும் பால்கன் நாடுகளின் விடுதலைப் போர் ஆகியவை ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம்தான் வெற்றி பெற்றுள்ளன. இத்தாலிய ஜெர்மானிய தேசிய இயக்கங்களும் போர் முனையில்தான் தங்கள்  இலட்சியங்களை நிறைவேற்றின. பூர்போன் வல்லாட்சியும் சார் சக்கரவர்த்திகளின் கொடுங்கோலாட்சியும், ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம்தான் விழ்த்தப்பட்டன. அயர்லாந்து விடுதலைப் போர் (சீன்பின்) இந்தியப் புரட்சியாளர்களுக்கு கண்கூடான எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தது. எனவே இந்தியாவிலும் இளைஞர்கள் வன்முறைப் போராட்டங்களில்  நாட்டங்கொண்டதில் வியப்பில்லை; அன்னிய ஆதிக்கத்தை வீழ்த்த  ஆயுதப் புரட்சியைத் தவிர வேறு வழியேயில்லை என்று உறுதியாக நம்பினர்.

பொதுவாக அனைத்துப் புரட்சியாளர்களிடமும் நிறைத்திருக்கும் பண்புகள்தான் இந்தியப் புரட்சியாளர்களிடமுமிருந்தன; நாட்டுப்பற்று, அச்சமின்மை, உயிரைத் துச்சமாக மதித்தல், துணிச்சல், விடுதலை என்ற குறிக்கோளில் அசையா நம்பிக்கை எத்தகைய இடர்பாடுகளினுள்ளும் தளரா ஊக்கம், தற்சார்பு, தன்னம்பிக்கை, தியாக உணர்வு இவைகள்தாம் புரட்சியாளார்களின் இயல்புப் ப்டைக்கலன்களாக திகழ்ந்தன எனினும் எத்தகைய குறிப்பிட த்தக்க வெற்றியும் பெற்றுவிடவில்லை, அன்னிய ஆதிக்க அடிப்படையை அசைத்திடவில்லை; அன்னிய அரசு அலறிப்புடைக்கும் அளவிற்கு ஆபத்ததான சூழ்நிலை எதனையும் உருவாக்கிவிடவுமில்லை; அங்கொன்று இங்கொன்றுமாக வெடிகுண்டு வீச்சு, அரசின் உயர் அதிகாரிகள் மீது தாக்குதல், அரசுக் கருவூலத்தைக் கொள்ளையடித்தல் கிடங்குகளைக் கைப்பற்றுதல் என்ற அளவிலேதான் இருந்ததே தவிர நேரடியாக அரசின் படைபலத்தை சந்திக்கும் வகையில் தங்கள் படைத்திறனை வளர்த்திடவில்லை. கொரில்லாப் போர் முறையைக் கூட கைக்கொள்ளவில்லை; ஆயுதசக்தியை நம்பினரேயன்றி மக்கள் சக்தியை நம்பவில்லை; எனவே இந்தியப் புரட்சி இயக்கங்கள் மக்கள் புரட்சியாக உருவாகவில்லை. மிகக் குறைந்த அளவு நாட்டுப்பற்றாளர்கள் மிகப் பெரிய அளவு தியாகம் புரிந்தால் போதும் என்றெண்ணினர்; மிக அதிக மக்களை ஒன்று திரட்டி மிகக் குறைந்த தியாகத்தின் மூலம் விடுதலை பெறமுடியும் என்பதை சிந்திக்க மறுத்தனர்; ஒன்றிரண்டு தீரமிகு தியாகச் செம்மல்களையல்ல, ஒடுங்கிக்கிடக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் மக்கள் தலைவர்கள் புரட்சியாளர்களாகத் தோன்றவில்லை; அதாவது ஒரு கரிபால்டியோ, ஒரு லெனினோ இந்தியப் புரட்சியாளர்களிடை உருவாகவில்லை; அதேபோல் ஒரு கார்போனரியோ, போல்ஷ்விக்கட்சியோ இந்தியாவில் வளரவில்லை; நாடு தழுவிய இயக்கமெதனையும் திட்டமிட்டு உருவாக்க இயலவில்லை; லாகூர், மீரட், கல்கத்தா, டாக்கா, டில்லி, மணியாச்சி என்று ஒரு சில இடங்களில் மட்டும்தான் புரட்சியாளர்கள் விறு விறுப்பாக செயல்பட்டனர். புரட்சியாளர்களில் சிலர் ஷியாம்ஜி, ஹர்தயாள், ராஜா மகேந்திர பிரதாப் போன்றோர் கொள்கைப் பிடிப்பு காரணமாக கனவுலகில் சஞ்சரித்தார்களேயன்றி, கால மாறுதலையும் நடைமுறைக்குகந்த வழிமுறைகளையும் சிந்திக்க மறுத்தனர்.

ஆனால் 1919க்குப் பின் எழுந்த புரட்சியாளர்கள் ரஷியப் புரட்சியை முன்னோடியாகக் கொண்டு உள்ளுணர்வு பெற்று சோஷலிசக் கருத்துக்க்ளில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர்; அகில உலகக் கண்ணோட்டத்துடன் சமயச்சா ர்பற்ற நோக்குடன் திட்டமிட்டனர்; அதற்கு முந்திய புரட்சியாளர்கள் பொதுவாக இந்தியப் பழம்பெறும் பண்பாட்டுச் சிறப்பில் பற்றுறுதி கொண்டு ஆன்மீக உணர்வுடன் புரட்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

புரட்சியாளர்களின் வீரதீர போராட்டங்களை வெறும் வன்முறை என்று குறை கூறிவிட முடியாது. வீணாக கொட்டப்பட்ட ரத்தம், விழலுக்கிறைத்த நீர் என்று அலட்சியப்படுத்தி விடவும் முடியாது; அவர்களது தியாகங்கள், சராசரி மனிதனால் பின்பற்றப்பட முடியாத அளவிற்கு கடினமானதயிருந்தாலும், சாமானியர் உள்ளத்தில் தேசிய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்ய போதுமானதாயிருந்தது. புரட்சியாளர்களை உடலால் பின்பற்ற முடியாவிட்டாலும் உணர்ச்சி வடிவில் பின்பற்ற ஆயிரக்கணக்கானோர் தயாராயிருந்தனர். பளிச்சென்று வீசும் மின்னல் போல் தேசிய உணர்ச்சிப் பிள்ம்பை நாடெங்கும் பரப்பியது. பயங்கர இடிமுழக்கம் போல் உள்ளத்தை உலுக்கியது.

அரசின் அடக்கு முறைகளும், புரட்சியாளர்களின் பழிதீர்க்கும் நடவடிக்கைகளும், ‘ஆனைக்குப் பானை சரி’ என்ற குரூர திருப்தியை அளித்ததேயன்றி வன்முறைக்கு வன்முறையிலேயே பதலளிக்கப்பட்டது. அதனால் வன்மமும் , குரோதமும் வளர்ந்தது. நன்னெறி சார்ந்த நாட்டு நலன்கள் மலரவில்லை. என்வே புரட்சி இயக்கங்கள் திகிலூட்டும் பயங்கர இயக்கங்களாக காட்சியளித்தன, கொள்கை நிறைவேற்றத்தையல்ல; கலப்படமற்ற நாட்டுப்பற்றுமிக்க இளைஞர்களின் ஆற்றல் , ஒரு வகையில் வீணடிக்கப்பட்டது. தற்கொலைக்கொப்பான தியாக வேள்வியில் தங்களை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் மாய்ந்ததும் அவர்கள் புரட்சி இயக்கமும் அநேகமாக மாய்ந்துவிட்டது

TNPSC GROUP I & II PRELIMS &  MAINS ADMISSION OPEN

  1. TEST BATCH / ONLINE POSTAL

  2. CLASSES / CLASSROOM COACHING / ONLINE COACHING

                    TO JOIN CONTACT 9952521550    

To get Daily Current Affairs Whatsapp with your name and District to 7418521550

 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!