வரலாற்றுக்கு முந்திய காலம் : ( Pre Historic Period)
மனித குல வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளைப் பற்றிய விவரங்களை குறிப்பிடும் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. இக்காலம் பற்றிய ஆவணங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கையின் அழிவிலிருந்து மிஞ்சிய சில தடயங்கள், உலகின் பழங்கால மனிதர்கள் உபயோகித்த ஆயுதங்கள், கருவிகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கற்காலம், உலோக காலம் என வரலாற்றுக்கு முந்திய காலத்தை வகைப்படுத்துகின்றனர். மனிதன் கற்களிலாலான ஆயுதங்களையும் கருவிகளையும் உபயோகித்த காலத்தையே கற்காலம் என்று அழைக்கிறோம். கற்காலத்தை பழைய கற்காலம் அல்லது பேலியோலிதிக்காலம்(Palaeolithic Age) என்றும் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக்காலம் (Neolithic Age) எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
பழைய கற்கால வாழ்க்கை : Palaeolithic Age
பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத் தேடி நாடோடியாக அலைந்தான். பழங்கள், காய்கள், கிழங்குகள் மற்றும் கொட்டைகளை சேகரித்து உண்டான். பின் மிருகங்களை வேட்டையாடினான். சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டு பிடித்தான். இலைகளாலும், மரப்பட்டை களாலும், மிருகங்களின் தோலினாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொண்டான்.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இவைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர். இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு :
- வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி
- வடஇந்தியாவில் சிவாலிக் குன்றுகள்
- மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா
- நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று
- ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல்
- சென்னைக் கருகிலுள்ள அத்திரம்பாக்கம்
புதிய கற்கால வாழ்க்கை : Neolithic Age
புதிய கற்காலத்தில் மனிதன் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தான். பயிர்களின் வளர்ச்சிக்கு செழுமையான சமவெளிகளைத் தேர்ந்தெடுத்து நாகரிக வாழ்க்கைக்கு வழிவகுத்தான். மிருகங்களை வளர்க்கக் கற்றுக் கொண்டான். இந்த காலகட்டத்தில் சக்கரம் கண்டு பிடிக்கப் பட்டது. இக்கண்டுபிடிப்பு மனிதனின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சக்கரங்களின் உதவியினால் வண்டிகள் செய்து பெருஞ் சுமைகளை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல மனிதன் கற்றுக் கொண்டான். இதை அறிவியல் வளர்ச்சியின் முதல்படி என்று கூறலாம். மிகச்சிறிய நேரம் காட்டி (கடிகாரம்) முதல் பிரம்மாண்டமான ஆகாய விமானம் வரை சக்கரமே அடிப்படையாக உள்ளது. சக்கரத்தின் உதவியினால் கற்கால மனிதன் மட்பாண்டங்கள் உருவாக்கவும் கற்றுக் கொண்டான். இப்படியாக புதிய கற்கால மனிதன் நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலினான்.
இடைக்கற்காலம்- Mesolithic
மனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக் கற்காலம் என்று அழைக்கிறோம். இது சுமார் கி.மு. 10000 முதல் கி.மு. 6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது. இடைக்கற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஒரளவு யூகிக்க முடிகிறது.
உலோக கால வாழ்க்கை : Chalcolithic
உலோகங்களின் கண்டு பிடிப்பு மனிதனின் மிகப்பெரிய சாதனையாகும். ஆயுதங்கள் செய்வதற்கு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளின் அருகிலேயே வசித்தனர். எனவே ஆற்றங்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது. உலோக காலத்தை செம்புக்காலம், வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இரும்புக் காலத்தில் கலப்பைகளும், கத்திகளும் இரும்பால் செய்யப் பட்டன. எல்லா வகைகளிலும் மனித குலத்தின் முன்னேற்றம் ஏற்பட இக்காலம் வழிவகை செய்தது.
பொதுவாக, ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு – கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும். தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார் கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன
ஹரப்பப் பண்பாடு ( Harappa Civilization)
சான்றுகள் Resources : மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னு மிடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலமாக ஹரப்பப் பண்பாடு பற்றி நமக்கு தெரிய வந்துள்ளது. சர் ஜான் மார்ஷல் தன் குழுவுடன் மொகஞ்சதாரோவின் பல இடங்களில் ஆராய்ச்சி செய்தார். இந்த அகழ்வாராய்ச்சிJ.M. மக்கே, G.F. டேல்ஸ் மற்றும் M.S. வாட்ஸ் ஆகியோரால் தொடரப்பட்டது. இதன் விளைவாக மிக மேன்மையான நாகரிகம் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பே இருந்தது என நமக்குத் தெரிகின்றது. சர் ஜான் மார்ஷல் குழுவினரின் கண்டுபிடிப்புகள் ஹரப்பப் பண்பாடு பற்றிய அடிப்படைச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
கி.பி.1921-ல் ஹரப்பா என்னுமிடத்தில் நடந்த அகழ் வாராய்ச்சியின்போது இந்த சான்றுகள் கிடைத்ததால் இதை ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கிறோம். சிந்து நதியின் உபநதியான ராவி (Ravi) நதிக்கரையில் அமைந்த இடம் ஹரப்பா. பாக்கிஸ்தானிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் நதி ராவி, ஹரப்பா நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டு, கி.பி.1922-ல் சிந்து மாகாணத்தில் உள்ள (தற்போது பாக்கிஸ்தானைச் சேர்ந்தது) லர்கானா மாவட்டத்தில் உள்ள மொகஞ்சதாரோ என்னும் நகரம் தோண்டி எடுக்கப்பட்டது.
நகரங்களை கண்டுபிடித்தவர்கள்
நகரம் | நதிக்கரை | கண்டுபிடித்த ஆண்டு | கண்டுபிடித்தவர் |
ஹரப்பா | ராவி | 1921 | தயாராம் சஹானி |
மொஹஞ்சதரோ | சிந்து | 1922 | ஆர் டி பானர்ஜி |
ரோபார் | சட்லஜ் | 1953 | சர்மா |
லோத்தல் | போகவா | 1957 | எஸ் ஆர் ராவ் |
காளிபங்கன் | காக்கர் | 1959 | பி.பி லால் |
பன்வாலி | காக்கர் | 1974 | ஆர் எஸ் பிஸ்ட் |
ஹரப்பப் பண்பாடு சிந்து நதிக்கரையில் செழித் தோங்கியது. பழைய நாகரிகங்கள் ஏன் ஆற்றங்கரையிலேயே வளர்ந்தன என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவைகளில் ஒரு சில பின்வருமாறு :
- பெரிய குடியிருப்புகளுக்குத் தேவையான தண்ணிர் ஆறுகளிலிருந்து தாராளமாகக் கிடைத்தது.
- ஆறுகளைச் சார்ந்துள்ள நிலப்பகுதிகள் செழுமை வாய்ந்தவை. எனவே பலதரப்பட்ட பயிர்களை எளிதாகப் பயிர்செய்ய முடிந்தது.
- சாலைகள் இல்லாத காலகட்டத்தில் ஆறுகள் மிக மலிவான, எளிதான போக்குவரத்திற்குச் சாதகமாய் அமைந்தன.
சுற்றுப்புறச் சூழல் :
சிந்து, ஹரப்பா பிரதேசங்கள் ஈரப்பதம் நிலவிய நிலங்களைக் கொண்டதாகக் காணப்பட்டன. எனவே புலி, யானை மற்றும் காண்டாமிருகங்கள் வசித்த அடர்ந்த காடுகள் அங்கு இருந்தன. நகரங்களுக்குத் தேவையான செங்கற்களை தயாரிக்கும் செங்கல் சூளைகளுக்கு வேண்டிய மரங்கள் அக்காடுகளிலிருந்து கிடைத்தன.
காலம் :
இந்நாகரிகம் சால்கோலித்திக் காலம் (Chalcolithic Period) அல்லது செம்பு கற்காலம் என்று அழைக்கப்பட்ட புதிய உலோக காலத்தைச் சேர்ந்தது. இக்காலத்தில் தகரத்தையும், தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்கப்பட்டது. இந்த வெண்கலம் உறுதியாகவும், மக்களின் தேவைக்கு ஏற்பவும் இருந்தது. தரத்தில் மேம்பட்ட கருவிகள் விவசாய வளர்ச்சிக்கு உதவின. சிந்து சமவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது. சர் ஜான் மார்ஷலின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பரப்பு :
ஹரப்பப் பண்பாடு சிந்து, குஜராத், ஹரியானாவை உள்ளடக்கிய பிரிக்கப்படாத பஞ்சாப், ஜம்மு, உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, ராஜத்தானத்தின் வடபகுதி (காலிபங்கன்) ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இப்பகுதிகளில் காணப்பட்ட தடயங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளில் காணப்பட்ட சான்றுகளை ஒத்திருந்தன.
மற்ற நாகரிகங்களுடன் தொடர்பு : சிந்து சமவெளி மக்கள் சுமேரியா, பாபிலோனியா, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் கடந்து வாணிபம் செய்தனர். மேற்கு நாடுகளான சுமேரியா, அக்காட், பாபிலோனியா, எகிப்து, அசிரியா ஆகிய நாடுகளுக்குச் சமமாக சிந்து சமவெளி மக்கள் திகழ்ந்தனர்.
திட்டமிட்ட நகரங்கள் :
மொகஞ்சதாரோவும், ஹரப்பாவும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்கள். மிகப்பெரிய இந்த இரு நகரங்களுக்கும் இடையில் 600 கி.மீ. இடைவெளி இருந்தாலும் தொழில்நுட்பமும் கட்டட அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தன. அவைகள் அநேகமாக இரட்டைத் தலைநகரங்களாக (Twin Capitals) இருந்திருக்கக் கூடும். மொகஞ்சதாரோ என்றால் “இறந்தவர்களின் நகரம்’ என்பது பொருள். மொகஞ்சதாரோ நகர அமைப்பை மூன்று வகை யாகப் பிரிக்கலாம். அவை நகரின் உயரமான பகுதியான கோட்டை அல்லது சிட்டாடல் (Citadal), சற்றே தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் (Lower Town), ஊருக்கு வெளியே அமைந்த சிறிய குடிசைகள் ஆகியன ஆகும்.
கோட்டைப்பகுதி அல்லது சிட்டாடல் :
இந்த இடம் நகரின் உயரமான பகுதியில் காணப்பட்டது. அது சாதாரணமாக கோட்டை அல்லது நிர்வாகம் செய்யும் பகுதியாக அழைக்கப்பட்டது. அங்கு மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களில் ஆட்சியாளர் களும், சமயத்தலைவர்களும், செல்வந்தர்களும் அடங்குவர். சிந்து நதியின் வெள்ளப் பெருக்கிலிருந்து நகரைக் காக்க பிரம்மாண்ட சுவர்கள் கோட்டையைச் சுற்றிக் கட்டப்பட்டன. அக்கோட்டையில் மிகப் பெரிய தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் (Town Hall), அமைந்திருந்தன.
பெருங்குளம் :
கோட்டையில் காணப்படும் இந்த பெரியகுளம் 11.88 மீட்டர் நீளமும் 7.01 மீட்டர் அகலமும் 2.43 மீட்டர் ஆழமும் உடையதாகக் காணப்பட்டது. இருபக்கங் களிலும் படிக்கட்டுகள் அமைந்த அக்குளம் செங்கற்களும், சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவையைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில் சுத்தமான தண்ணிர் உள்ளே வரவும், கீழ்பகுதியில் உபயோகித்த நீர் வெளியே செல்லவும் வழி வகைகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் குளத்து நீர் எப்போதும் சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. குளத்தின் அருகில் காணப்படும் சிறிய அறைகள் உடை மாற்றும் அறைகளாக இருந்திருக்கக்கூடும். அந்த அறைகள் ஒன்றில் பெரிய கிணறு ஒன்று அமைந்திருந்தது.
தானியக் களஞ்சியம் :
மொகஞ்சதாரோவில் காணப்படும் மிகப்பெரிய கட்டட அமைப்பு தானியக் களஞ்சியம் ஆகும். அது 45.71 மீட்டர் நீளமும், 15.23 மீட்டர் அகலமும் கொண்டது. ஹரப்பாவில் 6 தானியக் களஞ்சியங்கள் இருந்தன. தானியக் களஞ்சியங்களின் தென்பகுதியில் வட்ட வடிவில் அமைந்த செங்கற்களாலான மேடைகள் காணப்பட்டன. இவை தானியங்களை பிரித்தெடுக்கும் இடமாகக் கருதப்படுகின்றன.
நகர மன்றம் :
நகரமன்றம் அல்லது பொதுக்கூடம் 61 மீட்டர் நீளமும் 23.4 மீட்டர் அகலமும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டது. நகரமன்ற கட்டடச்சுவரின் அடர்த்தி 1.2 மீட்டரிலிருந்து 1.5 மீட்டர் வரை அமைந்திருந்தது. அது நிர்வாகச் சம்பந்தமான கட்டடமாகவும், மக்கள் கூடும் இடமாகவும், பிரார்த்தனை கூடமாகவும், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாகவும் இருந்திருக்கக்கூடும்.
தாழ்ந்த பகுதியில் அமைந்த நகரம் :
அது கோட்டைப் பகுதியை ஒட்டிய தாழ்வானப் பகுதி நகரப்பகுதியாகும். அங்கு சிறு வியாபாரிகளும், கைவினைக் கலைஞர்களும் வசித்தனர். அந்த நகரம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு அகல சாலை களைக் கொண்டதாகக் காணப்பட்டது. சாலைகள் கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சாலைகள் ஒன்றையொன்று செங்கோண நிலைகளில் வெட்டும் வகையில் அமைந்திருந்தன. எனவேதான் எஞ்சிய செங்கற்களின் வரிசையை அங்கு நம்மால் காண முடிகிறது. அங்கு செயல்பட்ட கழிவுநீர் கால்வாய் திட்டம் பாராட்டிற்குரியது. தெரு விளக்குகளுக்கான வசதிகளும் இருந்தன.
வீடுகள் :
வீடுகள் ஒரிரு மாடிகள் கொண்டதாக இருந்தன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான சுட்ட செங்கல் கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள், ஒரு குளியலறை, ஒரு சமையலறை மற்றும் வீட்டுடன் சேர்ந்த முற்றம், வெளியிடம் ஆகியன கொண்டதாக இருந்தன. வீடுகளில் கதவுகளும், சிறிய ஜன்னல்களும் காணப்பட்டன. சமையல் அறைக்கு வெகு அருகில் தானியங்கள் அரைக்கும் கற்களாலான அரவைக் கற்கள் (Grinding stones) காணப்பட்டன.
கழிவுநீர் கால்வாய் திட்டம் :
சமையலறையிலிருந்தும் குளியல் அறையிலிருந்தும் வெளியேறிய கழிவுநீர் வெளியே செல்ல வழி செய்யப்பட்டிருந்தது. தெருக்களின் ஒரங்களில் கழிவுநீர்கால்வாய்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. கழிவுநீர் ஓட்டம் சரிவர அமையுமாறு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்பாதைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன.
மக்களின் தொழில் :
சிந்து சமவெளி மக்களில் விவசாயிகள், நெசவாளர்கள், மண்பானைகள் செய்வோர், உலோக வேலையில் வணிகர் என பலதரப்பட்ட மக்கள் காணப்பட்டனர். விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும். வளமான நிலங்களில் விவசாயிகள் இருமுறை விவசாயம் செய்தனர். நெற்பயிர் மற்றும் பருத்தி ஆகியவற்றை முதன்முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி மக்களேயாவர். நீர்பாசன முறையின் பல வகைகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. கரும்பு பயிரிடுதல் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கலப்பையையும், அரிவாளையும் உபயோகித்தனர். மட்பானை செய்தல் பெயர் பெற்ற தொழிலாகத் திகழ்ந்தது. குயவர்கள் பானை செய்யும் சக்கரத்தை உபயோகிப் பதில் மிகத்திறமை பெற்றவர்களாக இருந்தனர்.
கால்நடை வளர்ப்பு : சிந்துசமவெளி மக்கள் காளை, எருது, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி, கழுதை, ஒட்டகம் ஆகிய வற்றை பழக்கி வைத்திருந்தனர்.
நூல் நூற்றலும் நெசவுத் தொழிலும் :
சிந்து சமவெளி மக்கள் நூல்நூற்பதிலும் ஆடைகள் நெய்வதிலும் திறமை பெற்றிருந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் உரோமத்திலிருந்து கம்பள ஆடைகளைத் தயார் செய்தனர்.
பொம்மை செய்தல் மற்றும் சிற்ப வேலை : டெர கோட்டா எனப்படும் சுடு மட்பாண்டத் தொழில் மக்களின் முக்கியத் தொழிலாகத் திகழ்ந்தது. பொம்மைகள், மிருகங்களின் சிறு உருவச் சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் எருதுகளால் இழுக்கப்படும் ஒட்டுனருடன் கூடிய பொம்மை வண்டி குறிப்பிடத்தக்கது. மக்கள் வணங்கிய திமில்காளை, புறா போன்றவைகளின் உருவம் பொறித்த சில சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெண் கடவுளர்களின் உருவங்கள் சமய நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
சின்னங்கள் : இங்கு 2000க்கும் மேற்பட்ட சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் மிருகங்களின் உருவங்களும் சித்திர எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. சுடுமண் சுதையினால் வேகவைக்கப்பட்ட இந்தச் சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். மேலும் சிந்துசமவெளி மக்களின் வாழ்க்கை முறை, சமயம், தொழில், பழக்கவழக்கம் மற்றும் வாணிபம் பற்றிய விவரங்களை அறிய இவை உதவுகின்றன.
கட்டடத் தொழில் :
ஏராளமான மக்கள் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். செங்கற்கள் உற்பத்தியும் முக்கியதொரு தொழிலாக இருந்தது. செங்கற்கள் அனைத்துமே ஏறக்குறைய ஒரே அளவில் இருந்தன.
கலைகள் மற்றும் கைவினை
பல்வேறு கைத்தொழில்களில் தேர்ச்சிபெற்ற கைவினைஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர். பொற்கொல்லர்கள், செங்கல் செய்வோர், கல் அறுப்போர், நெசவுத் தொழிலாளர், படகு கட்டுவோர், சுடுமண் கலைஞர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வெண்கலம் மற்றும் செம்பாலான பாத்திரங்கள் ஹரப்பா பண்பாட்டு உலோகத் தொழிலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தங்கம் மற்றும் வெள்ளியாலான ஆபரணங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருந்தன. ஒருசில இடங்களில் சிகப்பு மற்றும் கருப்பு வண்ணம்பூசிய மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அரிய வகை கற்களாலான மணிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. வெண்கலத்திலான நாட்டிய மங்கையின் சிலை மற்றும் தாடியுடன் கூடிய மனிதன் சிலை ஆகியவை மொகஞ்சதரோவில் காணப்பட்டது.
வாணிபம் :
சிந்து சமவெளி மக்கள் உள்நாட்டு, வெளி நாட்டு வாணிகங்களிலும் ஈடுபட்டிருந்தனர். மெசபட்டோமியோவின் சின்னங்கள் பல சிந்து சமவெளி நகரங்களிலும், சிந்து சமவெளிச் சின்னங்கள் பல மெசபட்டோமியா பகுதியிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள லோத்தல் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடந்திருக்கக்கூடும். வியாபாரிகள் செல்வச் செழிப்பான வாழ்க் கையை நடத்தினர். பொருட்களை அளக்க அளவுகோலைப் பயன்படுத்தினர். மேலும் எடைக் கற்களும், அளவுகளும் உபயோகத்தில் இருந்தன. அவர்கள் 16ன் மடங்குகளை அளவுகளாக பயன்படுத்தினர்.
அரசியல் அமைப்பு:
செல்வமுடைய வணிகர்களும், சமயத் தலைவர்களும் நகர நிர்வாகத்தை மேற்கொண்டனர். அங்கு உள்ளாட்சி அமைப்பும் காணப்பட்டது. அவை நகரத்தின் சுகாதார வசதிகளில் கவனம் செலுத்தின. அவை வணிகத்தினையும் ஒழுங்குபடுத்தின. நகர நிர்வாகம் வரியை தானியமாக வசூலித்தது. நகராட்சி நகரின் சட்டம், ஒழுங்கினைப் பராமரித்தது.
சமூக வாழ்க்கை :
சமுதாயம் மூன்று வித சமூக குழுக்களைக் கொண்டிருந்தது. முதல் குழு அல்லது ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் கோட்டைப் பகுதியில் வசித்தனர். செல்வம் மிக்க வணிகர்களும் சமயத் தலைவர்களும் அக் குழுவில் இடம் பெற்றனர். இரண்டாவது பிரிவில் சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், கைத்தொழிலாளர்கள் இருந்தனர். மூன்றாவது வகையைச் சேர்ந்த தொழிலாளிகள் சிறு குடிசைகளில் வசித்தனர். பொதுவாகக் கூறினால் சமூக அமைப்பானது வரையறுக்கப்பட்ட கட்டுக்கோப்புடன் காணப்பட்டது.
மக்களின் வாழ்க்கை :
சிந்து சமவெளி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஒய்வுநேரம் அவர்களுக்கு நிரம்பக் கிடைத்தது. மக்களின் உணவு, பழக்கவழக்கங்கள், உடை, பொழுது போக்கு ஆகியவற்றில் பெருத்த முன்னேற்றம் காணப்பட்டது.
உணவு :
கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகக் கருதப்பட்டன. அதைத் தவிர பால், மாமிசம், மீன், பழங்கள், பேரீச்சை ஆகியவற்றையும் அவர்கள் உபயோகித்தனர்.
ஆடைகளும் நகைகளும்
இடுப்பைச் சுற்றி ஒட்டியாணம் (அரைக்கச்சை) போன்ற அமைப்புடன் கூடிய குட்டைப் பாவாடைகளை பெண்களும், தைக்கப்படாத, நீண்ட, தளர்ச்சியான ஆடைகளை ஆண்களும் அணிந்தனர். பெண்கள் கழுத்து ஆரம், வளையல், கடகம் எனப்படும் கைக்காப்பு (bracelets), காதணி, இடுப்புக் கச்சை போன்றவற்றை அணிந்து கொண்டனர். இவைகள் தங்கம், வெள்ளி, எலும்பு, கற்கள், கிளிஞ்சல்கள் மற்றும் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன.
ஆண்களும் கையைச் சுற்றி அணியும் காப்பு வளையங்களை (Armlets) அணிந்தனர். செல்வந்தர்கள் தங்கம், வெள்ளி, தந்த ஆபரணங் களையும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் கிளிஞ்சல், தாமிரம், வெள்ளி ஆகியவற்றால் செய்த ஆபரணங்களையும் உப யோகித்தனர். பெண்கள் சீப்பினால் தங்கள் கூந்தலை சீவும் பழக்கம் இருந்தது.
சிந்து எழுத்து முறை :
இங்கு கிடைத்துள்ள சின்னங்களின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு சில வார்த்தைகளே. படங்களைக் கொண்ட எழுத்து முறை வளர்ச்சி யுற்றிருந்தது. மொத்தம் சுமார் 250 முதல் 400 வரை இத்தகைய பட எழுத்துக்கள் கொண்ட சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த எழுத்துக்களின் பொருள் இன்னமும் அறியப்பட வில்லை என்பது வியப்புக்குரிய தொன்றாகும்
சமய வாழ்க்கை : அவர்களது சமய வழிபாட்டின் சின்னமாக அரசமரம் விளங்கியது. அம்மக்கள் பசுபதி என்ற சிவனையும் பெண் கடவுளையும் வணங்கினர். பெண் கடவுள் உயிரோட்டத்தைப் பிரதி பலித்தது. அங்கு காணப்படும் புதை பொருட்களில் கோயில் போன்ற அமைப்பு கொண்ட கட்டடம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி பசுபதி சின்னம் மக்கள் மறுபிறவியில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது. ஏனெனில் அவர்கள் இறந்தவர்களை புதைத்த போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்து புதைத்தனர். மேலும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திய பொருட்களையும் மிகப்பெரிய தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சி ;
ஹரப்பா நாகரிகம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் சிறப்புற்றிருந்தது. அந்த காலத்தில் மக்கள் ஒரே விதமான வீடுகளில் வசித்தனர். உணவு மற்றும் அவர்கள் உபயோகித்த கருவிகளிலும் மாற்றம் ஏதும் இல்லை. மொகஞ்சதாரோ நகரம் பலமுறை அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. அந்த அழிவிற்குச் சரியான காரணங்கள் இன்னமும் நமக்குக் கிடைக்கவில்லை. இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவற்றாலோ அல்லது சிந்துநதியின் திசை மாற்றத்தாலோ அந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அந்நகரங்கள் ஆரியரின் படையெடுப்பினாலும் அழிந்தன. காடுகள் அழிக்கப்பட்டதும் அந்த நாகரிகம் வீழ்ச்சியுற மற்றொரு காரணம் எனலாம்.