அரசியலமைப்பு உருவாக்கம் MAKING OF CONSTITUTION

அரசியலமைப்பு உருவாக்கம் Making of Constitution

அரசியலமைப்பு உருவாக்கம் MAKING OF CONSTITUTION

 

Join our telegram: https://t.me/iyachamyacdemy  

(அரசியலமைப்பு புத்தகம் தமிழில் ஜனவரி மாதம் வெளியிடப்படும்)

அரசியல் நிர்ணய சபை Constituent Assembly

வரலாற்றுச் சிறப்புடைய இந்திய அரசியல் நிர்ணய சபை 1946ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் கூடிற்று. சபையின் வயது முதிர்ந்த உறுப்பினராகிய சச்சிதானந்த சின்ஹா என்பார் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பின்னர், காங்கிரசுக் கட்சியின் முதன்மையாளர்களில் ஒருவராகிய இராஜேந்திர பிரசாத் என்பாரைத் தலைவராகச் சபை உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

சபையைக் கூட்டிய பிரிட்டிஷ் அரசாங்கம் அதைக் கலைக்கவும் முடியுமென்றமையால் சிலர் அதன் இறைமையைப் ( sovereign)  பற்றி ஐயுற்றனர். இருப்பினும், இச்சபைக்கான விதிமுறைகளைச் சபையே செய்து நிறைவேற்றலாமென்றமையால் சபை தன் பணிகளைத் தொடங்கும் பொழுதே இறைமையுடையதாக மாறிக் கொள்ளும் என்றும் காங்கிரசுக் கட்சித் தலைவர்கள் கருதினார்கள். இக்கருத்தினை நீண்ட விவாதத்திற்குப்பின் சபை ஏற்றுக் கொண்டது.

சபை சில நடைமுறை விதிகளைச் செய்து கொண்டது. அவற்றில் சிறப்பாக இரண்டு விதிகளைக் கூறலாம். ஒன்று. சபைத் தலைவரைச் சபையின் தனிச்சிறப்புரிமைகளுக்குக் காவலராக அமர்த்தியதாகும். இரண்டு, சபை உறுப்பினர்களின் மூன்றிலிரு பெரும்பான்மை வாக்குகளாலன்றிச் சபையைக் கலைக்க முடியாது. இவ்விரு விதிகளும் சபையின் முழு இறைமையை வலியுறுத்தின வெனக் கருதலாம்.

சபை மேற்கொள்ளத்தக்க பணிகளை, நேருவின், வரைவுத்  தீர்மானம்’ (Objective Resolution) நன்கு விளக்கிக் கூறிற்று. அரசியலமைப்பு பற்றிய கருத்துகளை ஆராய, சபை பல குழுக்களை அமர்த்தியது. பல குழுக்களில் நேருவும் பட்டேலும் தலைவர்களாய் இருந்து அரசியலமைப்பின் சில அடிப்படைக் கருத்துகளை உருவாக்கினர். குழுக்களின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு பெனகல் நரசிங்கராவ் ஒரு நகல் அரசியலமைப்பை உருவாக்கினார். அம்பேத்காரைத் தலைவராகக் கொண்ட ஒரு வரைவுக் குழுவினைச் (Drafting Committee) சபை அமர்த்தியது. இக் குழு நகல் அரசியலமைப்பை நன்றாக ஆராய்ந்து பிறிதொரு நகல் அரசியலமைப்பைச் சபை முன் வைத்தது. இந்நகலைச் சபை நீண்ட நாட்கள் ஆழ்ந்து ஆய்ந்த பின் ஏற்றுக்கொண்டது.

அரசியலமைப்பைப் படைக்க (அரசியல் நிர்ணய ) சபை ஏறத்தாழ மூன்றாண்டுகளைச் செலவிட்டது. சபை பதினோரு தொடக்கக் கூட்டங்களாக 165 நாட்கள் கூடிற்று. 165 நாட களில் 114 நாட்களை நகல் அரசியலமைப்பு ஆய்வினில் செல விட்டது. அரசியலமைப்பு இறுதிநிலையில் 395 பிரிவுகளையும் 9 தபசில்களையும் கொண்டிருக்கிறது.

சபை’, அரசியலமைப்பைப் படைக்க ஜனநாயக முறைகளையே மேற்கொண்டது. நகல் அரசியலமைப்பிற்கு 7,635 திருத்தங்களைச் சபை உறுப்பினர்கள் கொண்டுவந்தனர். இவற்றில் 2,473 திருத் தங்களைச் சபை ஏற்று விவாதித்துப் பின் அவைகளைத் தள்ளியது. உறுப்பினர்கள் அஞ்சாமல் கருத்துகளை வெளியிடவும், பிறர் கருத்துகளை ஏற்றுச் சிந்திக்கவும் சபை பெருமளவில் உதவிய தெனலாம்.

மற்ற நாடுகளின் அரசியல் நிர்ணய சபைகளுடன் நமது சபையை ஒப்பிடும் பொழுதுதான் அதன் சிறப்பு நமக்கு விளங்குகிறது. அமெரிக்கா தனது அரசியலமைப்பைப் படைக்க நான்கு மாதங்களையும், ஆஸ்திரேலியா ஒன்பது ஆண்டுகளையும், கனடா இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்களையும் செலவிட்டன. இந் நாடுகளின் அரசியலமைப்புகளெல்லாம் மிகச் சிறியனவாகவே இருந்தன. ஆனால், நமது அரசியலமைப்போ மிகப் பெரியதாகும். இதை மனத்திற்கொண்டு பார்க்கும் பொழுது நாம் செலவிட்ட காலம் குறைவானதேயாகும். மற்ற நாடுகளின் அரசியல் நிர்ணய சபைகள் திருத்தங்களை ஏற்கவில்லை. அவை நகல் அரசியல் அமைப்புகளைக் கொண்டுவந்தபடியே நிறைவேற்றின .

கேபினெட் குழுவினர் திட்டப்படி அரசியல் நிர்ணய சபையில் 385 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இவர்களில் 292 உறுப் பினர்களை பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுக்கெனவும், 93 உறுப்பினர்களை இந்திய அரசுகளுக்கெனவும் கேபினெட் குழுவினர் பிரித்திருந்தனர். ஆனால், நாட்டுப் பிரிவினைக்குப் பின் 75 உறுப்பினர்கள் குறைந்துவிட்டார்கள் ; எனினும், சபை பெரிதாகவே தோன்றிற்று.

சபையின் செயற்கரிய பணிகளைச் செய்துகாட்டியவர்களில் தலைசிறந்தாராக வரைவுக்குழு உறுப்பினர்களையும், அதன் தலைவரையும் குறிப்பிடவேண்டும். இக் குழு, அம்பேத்காரைத் தலைவ ராகவும், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார், கே. எம். முன்ஷி, டி. டி. கிருஷ்ணமாச்சாரி, முகமது சாதுல்லா, மாதவராவ் போன்றாரை உறுப்பினராகவும் கொண்டிருந்தது. இவர்களனைவரும் தம்மாலான பணிகளைச் சிறப்புடன் செய்து புகழ்பெற்றனர்.

அம்பேத்கார் காங்கிரசுக் கட்சியின் எதிர்ப்பாளராகவே அரசியல் நிர்ணய சபையில் நுழைந்தாரெனினும், நாட்டுப் பிரிவினைக்குப் பின் அவருடைய கொள்கைகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவரும் சபையுடன் ஒத்துழைக்க விரும்பினார். எனவே, காங்கிரசுத் தலைவர்கள் அவரை வரைவுக் குழுவின் தலைவ ராகத் தேர்ந்தமர்த்தினார்கள். அவருக்களித்த பொறுப்புகளைத் திறமையுடன் செயலாற்றினார். தேர்ந்த கல்வியறிவாலும், பரந்த அனுபவத் திறனாலும், அவர் சபையின் சிக்கல் நிறைந்த சொற்போர்களுக்குத் தக்க விளக்கம் கூறிச் சபை நிகழ்ச்சிகளில் அறிவொளி படரச் செய்தார்.

சபைத் தலைவராக இருந்த இராஜேந்திரப்பிரசாத், தம் கடமை உணர்ந்து, நடுநிலை நின்று மாண்பு குறையாது சபை நிகழ்ச்சிகளை நடத்தினார். அடிக்கடி சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தம் தெளிந்த கருத்துகளையும் சபைக்கு வழங்கினார்.

நேரு பிரதம அமைச்சர் என்ற முறையிலும், காங்கிரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் சபையில் எழுந்த சிக்கல்க ளனைத்திற்கும் தக்க மாற்றம் கூறி நிகழ்ச்சிகளில் தெளிவுண்டாக் கினார்.

அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர்கள் பற்றிய – குழுவின் தலைவராகச் சர்தார் வல்லபாய் பட்டேல் பணியாற்றினார். அவருக்களித்த மிகக் கடினமான பொறுப்புகளை அவருக்கே உரித் தான திறமையால் செய்து காட்டினார் ; எல்லோரையும் அச் சுறுத்தி வந்த இந்திய அரசுகளைத் தக்க முறையில் பக்குவமாய் இணைத்துக் கூட்டாட்சிக்கு அடிக்கல் நாட்டினார்.

அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராக B. N. ராவ் பணியாற்றினார். சபைக்குப் பயன்படும் வகையில் இவர், ஒரு நகல் அரசியலமைப்பினை வழங்கினார். இதையே வரைவுக் குழுவினர் ஆதாரமாகக் கொண்டு மற்றொரு நகல் அரசியலமைப்பினைச் சபை முன் வைத்தனர்.

இவர்கள் நீங்கலாகச் சபை நிகழ்ச்சிகளில் பெரும் பங்கு கொண்டவர்களில் எச். வி. காமத், நாசர்யுதின் அகமது, சிபன்லால் சாக்செனா. கே. டி. ஷார், குன்சுரு , தக்குர்தாஸ் பார்க்காவா, ஃபிராங் அந்தோனி , ஜெய்பால் சிங் போன்றோர்களுடன் இன்னும் பலரைச் சேர்த்துக்கொள்ளலாம். சபையின் திறமை மிக்க உறுப்பினர்களுடன் கட்சிச் சார்பற்ற உறுப்பினர்களும் நன்முறையில் செயல்பட்டுச் சபையின் பரந்த அமைப்பிற்கு மெருகிட்டு அணி செய்தனர்.

நிர்ணய சபை விவாதங்கள் Constitutional Assembly Discussion

25.11.1949 மற்றும் 26.11.1949 இரண்டு நாட்களும் டாக்டர் அம்பேத்காரும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் சில விளக்கங்களை அளித்தார்கள்.

“அரசமைப்புச் சட்டம் மேன்மையானதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் சட்டமும் மோசமாகி விடும் என்றும் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும், சாதி மத பேதங்களே நம்முடைய எதிரிகள் என்றும், நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் தூக்கிப் பிடிக்குமானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆளாகும்” என்றும் டாக்டர் அம்பேத்கர் எச்சரிக்கை செய்தார். மேலும் டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்.

“இந்திய அரசியல் துறையில் தலைவர்களிடம் பக்தி காட்டும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. மோட்சம் பெறுவதற்கு வேண்டுமானால் பக்தி பயன்படலாம். ஆனால் அரசியல் தலைவர் மீது பக்தி ஏற்பட்டுவிட்டால் நமக்கும் பேரழிவு விளையும். இதன் தவிர்க்க முடியாத பின் விளைவாக சர்வாதிகாரம் தோன்றும்”.

“நாம் அரசியலில் குடி ஆட்சிமுறை கிடைத்து விட்டால் மட்டும் திருப்தி அடைந்து விடக்கூடாது. இந்தக் குடியாட்சி முறைக் கொள்கை நமது சமூக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் முழுமையாக ஊடுருவி பரவி இருக்க வேண்டும். நமக்கு அரசியல் ஜனநாயகம் மட்டும் போதாது. பொருளாதார மற்றும் சமூக அடிப்படையிலான ஜனநாயகமும் தேவை”.

“நமது நாட்டின் அரசியல் வாழ்வில் 26.01.1950லிருந்து சமத்துவம் நடைபோடத் துவங்கும். ஆனாலும் சமூக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் வேறுபாடுகள் நீடிக்கத்தான் செய்யும். இந்த விபரீதம் நீடித்தால், ஏற்றத்தாழ்வு என்ற நெருப்பால் கருகும் வர்க்கத்தினர், நாம் கடுமையாக முயன்று நிறுவிய இந்த ஜனநாயக அரசியல் மாளிகையைத் தூளாக்காமல் விட மாட்டார்கள்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யோக்கியர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டு நலனிலே மட்டும் அக்கறையுள்ள நேர்மையானவர்களே இப்போது இந்தியாவின் தேவை என்றும் குறிப்பிட்டார்.

வரைவு அரசமைப்புச் சட்டம் 4.11.1948 அன்று விவாதத்திற்கு எடுக்கப்பட்டு 9.11.1948 வரை நடந்தது. பின்ன ர் 15.11.1948 அன்று மீண்டும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு 17.10.1949 வரை நடந்தது. 7635 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 2473 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டன

மீண்டும் 14.11.1949 அன்று விவாதத்திற்கு எடுக்கப்பட்டு 26.11.1949 வரை விவாதம் நடந்தது. கடைசியாக அரசியல் சட்ட நிர்ணய சபையின் கூட்டம் 24.1.1950 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நகல் அரசமைப்புச் சட்டம் விவாதத்திற்கு வந்தபோது பல கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக அடிப்படை உரிமைகள் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. 13ஆவது விதி பற்றிக் குறிப்பிட்டு, அதில் சில விதி விலக்குகள் சொல்லப்பட்டுள்ளன, அவை அடிப்படை உரிமைகளை அழித்துவிடும் என்றும், அவை ஏமாற்று வேலையாக இருக்கின்றது என்றும் வாதம் வைக்கப்பட்டது. அந்த வாதத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பதில் சொன்னார். “அடிப்படை உரிமைகள் முழுமையானது. அடிப்படை உரிமைகள் அல்லாதவை முழுமையானது அல்ல. அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை அல்லாத உரிமைகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை அல்லாத உரிமைகள் என்றால் அவை இரு தரப்பினரின் ஒப்பந்த அடிப்படையில் உருவாகின்றன. ஆனால் அடிப்படை உரிமைகள் சட்டம் கொடுக்கும் கொடை (Gift) ஆகும்”.

“அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகள் தற்போதைய தலைமுறையின் எண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இப்படி நான் சொல்லும்போது, என் வாக்குமூலம் அதிகப்படியானது என்று நீங்கள் நினைத்தால் இது அரசமைப்பு நிர்ணய சபையின் கருத்தாகக் கொள்ள வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்க சட்ட மேதை ஜெபர்சன் (Jafferson) சொன்னதைத் தான் சொல்ல வேண்டும். ஒரு நாட்டின் ஒவ்வொரு தலைமுறையும், ஒரு வகையில் தனி நாடு தான். பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி, அம்மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்தான் உருவாகும். ஆனால் அடுத்த தலைமுறையை அது கட்டுபடுத்தாது, எப்படி அடுத்த நாட்டவரின் சட்டம் இன்னொரு நாட்டைக் கட்டுப்படுத்தாதோ. அதே நிலைதான் ஒவ்வொரு தலைமுறைக்கும். அதாவது ஒவ்வொரு தலை முறையும் தங்கள் வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும்”.

அரசமைப்புச் சட்ட நகல் வடிவத்தை விவாதிக்கும் போது ஒரு முக்கிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மத்திய அரசு அதிகாரக் குவிப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால் மாநில அரசுகளோ நகராட்சி நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.

மத்திய அரசிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை அம்பேத்கர் ஏற்கவில்லை. ஆனால் மாநில அரசுகளை மீறிச் செயல்படும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர், மத்திய அரசு அப்படிச் செயல்படுவது அவசர காலத்தின் போது தான் என்றும், சாதாரண சூழ்நிலையில் அல்ல என்றும் விளக்கம் கொடுத்தார்.

இன்னொரு முக்கிய விமர்சனம் உண்டு. அதாவது இந்தியப் பாரம்பரிய ஆட்சி முறையை, அரசமைப்புச் சட்டம் பிரதிபலிக்கவில்லை என்பது தான் அது. அதாவது ஊராட்சி அமைப்பு தான் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த விமர்சனம். இந்தியா அப்படித்தான் ஆளப்பட்டு வந்தது என்பது தான் அந்த வாதம். அம்பேத்காரின் பதில் இவ்விதமாய் அமைந்தது.

“இந்தியாவில் எத்தனையோ படையெடுப்புகள் நடந்தன. கிராமங்கள் வழியாகப் படைகள் சென்றன. ஆனால் கிராமப் பஞ்சாயத்து முறையால் அதனை எதிர்கொள்ள முடிந்ததா? தங்களையும், தங்கள் ஆடு மாடுகளையும் பாதுகாத்துக் கொண்டு வீட்டில் இருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடிந்தது? எதிரிப் படைகள் போகும்போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பெரும் பாடாய்ப் போனது. எனவே ஆற்றல் வாய்ந்த மாநில அரசும், மத்திய அரசும் தேவைப்படுகிறது. கிராம ஆட்சியை விட தனிமனிதனின் உரிமை மிக முக்கியமானது. அந்த உத்தரவாதத்தை அரசமைப்புச் சட்டம் தந்திருக்கிறது.”

அரசமைப்பு நிர்ணய சபை மீதான விமர்சனம் Criticism about Constituent Assembly

1946ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவரும் வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திவந்த காங்கிரஸ் கட்சி அனைத்து மக்களும் பங்கேற்கின்ற ஒரு தேர்தலின் மூலமாகவே அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் என்று பல தீர்மானங்களை அதற்கு முன்பு நிறைவேற்றியிருந்த போதிலும், இந்த அரசியல் நிர்ணய சபைக்கான உறுப்பினர்கள் சொத்து உடையவர்கள் அல்லது கல்வி அறிவு பெற்றவர்கள் என்ற இரு பிரிவினரால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகித பேராக மட்டுமே இருந்த பணக்காரர்களும், மேல் சாதியினரும் மட்டுமே இந்த அரசியல் நிர்ணய சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் பங்கேற்றார்கள்

இந்த அரசியல் நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.

Important Committee of the Constitution

அரசியலமைப்பு உருவாக்கத்தின் முக்கிய குழுக்கள்

Sr. No. Name of the Committee Chairman
1 Committee on the Rules of Procedure

செயல்முறை விதிகளுக்கான குழு

Rajendra Prasad

ராஜேந்திர பிரசாத்

2 Steering Committee

வழி நடத்துதல் குழு

ராஜேந்திர பிரசாத்
3 Finance and Staff Committee

நிதி மற்றும் பணியாளர் குழு

ராஜேந்திர பிரசாத்
4 Credential Committee

நம்பிக்கைக் குழு

Alladi Krishnaswami Ayyar

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்

5 House Committee

அவைக் குழு

B Pattabhi Sitaramayya

பட்டாபி சீதாரமய்யா

6 Order of Business Committee

வணிக ஒழுங்குக் குழு

KM Munshi
7 Ad-hoc Committee on the National Flag

தேசியக் கொடிக்கான தற்காலிக குழு

Rajendra Prasad

ராஜேந்திர பிரசாத்

8 Committee on the Functions of the Constituent Assembly

அரசியலமைப்பு சபையின் செயல்பாட்டுக்குழு

GV Mavalankar

ஜி வி மாவ்லங்கார்

9 States Committee

மானிலங்களுக்கான குழு

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

10 Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas

அடிப்படை உரிமைகள்,சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் நீக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆலோசனைக் குழு

Vallabbhai Patel

வல்லபாய் படேல்

11 Minorities Sub-committee

சிறுபான்மையினருக்கான துணைக்குழு

HC Mookherjee

எச் சி முகர்ஜி

12 Fundamental Rights Sub-Committee

அடிப்படை உரிமைகள் துணைக்குழு

JB Kripalani

ஜே பி கிருபாளினி

13 North-East Frontier Tribal Areas and Assam, Excluded and Partially Excluded Areas Sub-Committee

வடகிழக்கு முன்னனி பழங்குடியின பகுதிகள் மற்றும் அசாம் ஆகிய பகுதிகளுக்கான துனைக்குழு

Gopinath Bardoloi

கோபினாத் பர்தோலி

14 Excluded and Partially Excluded Area (other than those in Assam) Sub-Committee

அஸாம் தவிர்த்த வடகிழக்கு குழு

AV Thakur

ஏ வி தாக்கூர்

15 Union Powers Committee

ஒன்றிய அதிகாரக் குழு

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

16 Union Constitution Committee

ஒன்றிய அரசியலமைப்புக் குழு

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

17 Drafting Committee

வரைவுக்குழு

BR Ambedkar

பி ஆர் அம்பேத்கார்

 

வரைவுக்குழு

அனைத்துக் குழுக்களைக் காட்டிலும் வரைவுக்குழு மிக முக்கியமானதாகும் . இது 7 பேரைக் கொண்டு செயல்பட்டது

  1. பி.ஆர் அம்பேத்கார்-தலைவர்
  2. என்.கோபாலசாமி ஐயங்கார்
  3. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
  4. டாக்டர் கே எம் முன்ஷி
  5. சையது முகமது சாதுல்லா
  6. என் மாதவராவ் ( பி எல் மில்ட்டருக்கு பதிலாக )

அரசியல் அமைப்புக்குழுவின் கூடுதல் பணிகள்

அரசியலமைப்பு குழுவானது அரசியலமைப்புச் சட்டத்தினை மட்டும் உருவாக்காமல் அதனோடு கீழ்க்கண்ட பணிகளையும் மேற்கொண்டது

  • காமன்வெல்த் அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது 1949, மே
  • தேசியக் கொடியினை ஜீலை,22 1947ல் ஏற்றுக்கொண்டது
  • தேசியக் கீதத்தினை ஜனவரி 24,1950ல் ஏற்றுக் கொண்டது
  • தேசியப் பாடலினை ஜனவரி 24,1950ல் ஏற்றுக் கொண்டது
  • டாக்டர் ராஜேந்திரபிரசாத்தினை இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக தேர்வு செய்தது