தேர்வு நோக்கில்மத்திய பட்ஜெட் 2018 | IYACHAMY ACADEMY

மத்திய பட்ஜெட் 2018 -19 மற்றும் பட்ஜெட் தொடர்பானவை தேர்வு நோக்கில்

CLICK TO DOWNLOAD AS PDF தேர்வு நோக்கில் மத்திய பட்ஜெட்

பட்ஜெட் என்றால் என்ன?

ஒரு ஆச்சரியமான தகவல், இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது. அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே உள்ளது. இதற்கு அரசின் ஆண்டு வரவு – செலவுக் கணக்கு என்று அர்த்தம். அதனால்தான் பொதுவாக, இதனை பட்ஜெட் என்று அழைக்கிறோம். அரசியல் சட்டப் பிரிவு 112ன்படி, அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு நிதி அறிக்கையை நாடாளுமன்றம் (அ) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய குடியரசுத்தலைவர்/ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த உரையில் அரசின் முக்கிய வருவாய் சேர்க்கும் வழிகள், செலவுகள் போன்ற அம்சங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பார். அதேநேரத்தில், வருவாய் பெறும் வழிகள், செலவுக்கான விரிவான கணக்குகள் எல்லாம் தனித் தனி அறிக்கைகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த அறிக்கைகளை எல்லாம் விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டதாக சட்டமன்றம் குரல் வாக்குமூலம் அறிவிக்கும். இப்படிச் செய்வதாலேயே பட்ஜெட் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகாது. வரி வருவாய் வழிகளையும், செலவு செய்யும் வகைகளையும் தனித்தனியாக விவாதித்து, அதற்கான சட்டங்களைச் சட்டமன்றம் ஏற்படுத்தும். அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆளுநர் / குடியரசுத் தலைவர் இசைவு வழங்கிய பின்னரே, பட்ஜெட் நடைமுறைக்கு வரும்.

நிதிநிலை அறிக்கையின் வளர்ச்சி ( Evolution of Budget )

நிதிநிலை அறிக்கை ஒரு நாட்டினுடைய நிதியியலின் தன்மையை ஒவ்வொரு ஆண்டும் எதிரொலிக்கும் ஒரு கருவியாகும். பொருளியல் அறிஞர் வில்ட7 விஸ்கி “நிதியியலின் அரசியல்” என்ற நூலில் (The politics of the budgetary process by Aaron Wilda vsky, 1964) “ஒரு ஆண்டின் நிதி நிலை அறிக்கையினுடைய அள வையும் கூறுகளையும் மிகப் பெரிய அளவில் உறுதி செய்யும் காரணி, அதற்கு முந்தைய ஆண் டின் நிதிநிலை அறிக்கையேஆகும்” (The largest determining factor of the size and content of this year’s budget is last year’s budget) என்று துல்லியமாகக் கணித்துள்ளார். நிதிநிலை அறிக்கைகள் காலமும், பொருளாதாரச் சூழ்நிலை களும் வழங்கிய பாடத்தை ஏற்று பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளன.

18ஆம் நூற்றாண்டின் நிதி நிலை அறிக்கை என்பது வருவாய் செலவு இனங்களில் ஆண்டு அறிவிப்பாக மட்டும் இருந்த நிலை மாறி, காலப்போக்கில் ஒரு நாட்டினுடைய வளத்தைப் பெருக்கு வதற்கும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும், ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற் கும், வரிவிதிப்பில் சமத்துவ நெறியைக் கடைபிடிப்பதற்கும் உரிய படிமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

21ஆம் நூற்றாண்டில் எல்லா தரப்பு மக்களும் எதிர்பார்க்கும் ஒரு ஆண்டு நிதி அறிக்கையாக, ஒரு அரசியல் பொருளாதார அமைப்பாக மலர்ந்துள்ளது. நாடுகளின் தன்மைகளுக்கு ஏற்ப நிதி நிலை அறிக்கைகள் உருவாககப் படுகின்றன. 1950இல் இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நடை முறைப்படுத்தத் தொடங்கிய பிறகு, திட்டக்குழுவால் எதிர்ப்பார்க்கப்படும் இலக்குகளை எட்டுவதற்குத் துணை செய்யும் நிதியியல் பொருளாதார ஆவணமாக நிதிநிலை அறிக்கை திகழ்ந்தது. உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளைக் கடைபிடிக்கும் இக்காலக்கட்டத்திலும் நிதிநிலை அறிக்கையின் தன்மைகள் மாறி வந்தாலும், ஆற்ற வேண்டிய மக்கள் நலம் சார்ந்த பொறுப்புகள் பெருகி வருகின்றன.

நிதியியல் பொருளாதாரத்திலும், பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவ திலும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் சம பங்கினை வகிக் கின்றன. கூட்டாட்சி இயலைப் பின்பற்றுகின்ற, பெரும் மக்களாட்சி அமைப்பாக விளங்குகிற இந்தியாவில் பொது நிதியியலைச் சிறப்புற வழிநடத்துவதிலும், மக்கள் நலத் திட்டங்களை நிறை வேற்றுவதிலும் நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உரிமைகளும், கடமைகளும் சரிசம அளவில் உள்ளன .

சில தகவல்கள்

 • பட்ஜெட் என்பது ப்ரெஞ்சு மொழிச்சொல், பட்ஜெட் என்றால் சிறிய பை என்பது பொருள்

 • பட்ஜெட் முறை இந்தியாவில்பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1860 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.ஜேம்ஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் முதன் முதலாக பட்ஜெட்டினை தாக்கல் செய்து பேசினார்.

 • சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முதல் பட்ஜெட்டினை தமிழகத்தைச் சார்ந்த முதல் நிதி அமைச்சர் ஆர்.கே சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.

 • பாகிஸ்தானின் பிரதமராக இருந்த லியாகத் அலிகான் இடைக்கால அரசில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார்.

 • பட்ஜெட் என்பது அரசின் வளங்களை எவ்வாறு மக்களுக்கு பிரித்தளிப்பது என்பதை அடிப்படையாக கொண்டது. ஆண்டுதோறும் பட்ஜெட்டினை குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 112ன் படி பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்டு பாரளமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.

 • இந்தியாவிற்கான நிதி ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 ஆம் தேதி ஆகும்.

 • பட்ஜெட் என்பதை எதிர்பார்க்கப்பட்ட வரவு மற்றும் செலவு என்பதை உள்ளடக்கியதாகும்,அதாவது 2018 ஏப்ரல் 1 முதல் 2019 மார்ச் வரை இந்திய அரசின் வருவாய் இவ்வளவு எதிர்பார்க்கப் படுகிறது, இவ்வாறு வரக்கூடிய வருவாயை எவ்வாறு செலவு செய்வது அதாவது திட்டங்களின் மூலம் மக்களுக்கு எவ்வாறு அளிப்பது என்பதாகும்.

மத்திய நிதி நிலை அறிக்கை 2018 – 19 சிறப்பு அம்சங்கள்

 • உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அரசு வழங்கி வருகிறது. சவுபாக்யா திட்டத்தின் கீழ், 4 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

 • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலமாக 800க்கும் மேற்பட்ட மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஸ்டென்ட்கள் விலை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

 • ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டுவசதித்திட்டங்களில் வட்டியில் பெருமளவு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

 • அரசின் அனைத்து சேவைகளும், பேருந்து அல்லது ரயில் டிக்கெட்களாக இருந்தாலும் அல்லது தனிநபர் சான்றிதழாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 • மூத்த குடிமக்களுக்குச் சலுகைகள்: சேமிப்பின் வட்டி வருவாய் தள்ளுபடிக்கான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரமாக உயர்வு .பிரதம மந்திரி வயா வந்தனா யோஜனா 2020 மார்ச் வரை நீடிப்பு. தற்போதைய முதலீட்டு உச்சவரம்பு ரூ. 15 லட்சமாக உயர்வு

 • ரூ.1லட்சத்திற்கும் அதிகமான நீண்டகால முதலீட்டு ஆதாயங்களுக்கு அட்டவணைப்படுத்தும் பயனை அனுமதிக்காமல், பத்து சதவீத வரிவிதிக்கப்படும்

 • சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் இதன் கீழ் 1.5 லட்சம் மையங்களும் சுகாதார சேவையை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு வந்து அளிக்கும். இந்த மையங்கள் தொற்று இல்லாத நோய்கள் ம்ற்றும் தாய் சேய் சேவைகள் உட்பட முழுமையான சுகாதார சேவைகளை அளிக்கும். இவை அத்தியாவசிய மருந்துகளையும் பரிசோதனை சேவைகளையும் இலவசமாக அளிக்கும். இந்த முன்னோடி திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவன சமூக பொறுப்புணர்வு மூலம் தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

 • தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்:- தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்பது ஆயுஷ்மான் பாரத் கீழ் வரும் இரண்டாவது முன்னோடித் திட்டமாகும். இந்த திட்டம் 10 கோடி ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஓராண்டில் (சராசரியாக 50 கோடி பயனாளிகள்) 5 லட்சம் ரூபாய் வரை இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை சிகிச்சைகளை மருத்துவமனையில் சேர்ந்து பெற அளிக்கும். இது உலகின் மிகப்பெரிய சுகாதார வசதிக்கான அரசின் உதவி அளிக்கும் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்த போதிய நிதி அளிக்கப்படும்.

 • பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதிலாக டிஜிட்டல் பலகைகளை படிப்படியாக கொண்டுவர அரசுஉத்தேசித்துள்ளது. இதற்காக ரைஸ் எனப்படும் கல்வியில் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு முறை தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். இந்த திட்டத்திற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

 • பழங்குடியினத்தை சேர்ந்த சிறார்களுக்கு அவர்களுக்கு உகந்த சூழலில் சிறந்த தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியம் என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.  இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில்2022 ஆம் ஆண்டுக்குள், ஐம்பது சதவீத பழங்குடியினர் மக்கள் தொகை அல்லது குறைந்தது இருபதாயிரம் பழங்குடியினர் வசிக்கும் ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி ஏற்படுத்தப்படும்

 • வதோதராவில் சிறப்பு ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்

 • ஏர்இண்டியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை உட்பட24மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சிமேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

 • நாட்டிலுள்ள ரயில்வே ஒன்றிணைப்பை வலுப்படுத்துவதில் அரசின் நோக்கத்தை கவனத்தில் கொண்டு 2018­19க்கான பொது நிதிநிலை அறிக்கையில் இந்த அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 • 18 ஆயிரம் கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை, 3வது மற்றும் 4வது பாதைப்பணிகள், 5 ஆயிரம் கிலோமீட்டர் பாதையை அகலமாக்குவது, பெரும்பாலும் அனைத்து பாதைகளையும் அகல ரயில் பாதைகளாக மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும். 2017­18ல் 4000 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்படவுள்ளது

 • நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் வடிமைக்கப்படவுள்ளன.

 • இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டமான மும்பை ­ அகமதாபாத் புல்லட் ரயில் போக்குவரத்துக்கு 2017 செப்டம்பர் 14 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிவேக ரயில் திட்டங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வதோதராவில் கல்வி நிறுவனம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

 • வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்வதை இன்னும் தீவிரமாக்கவும் எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தவும் 372 வகையான வர்த்தக சீரமைப்புச் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன . சரக்குகளின் சந்தைக்கென ஆன்லைன் வழி ஒற்றைச் சாளர முறையைச் செயல்படுத்தும் வகையில், சரக்கு போக்குவரத்து இணையதளத்தை (National Logistics Portal) மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வடிவமைக்க இருக்கிறது.

 • பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வியளிப்போம் திட்டத்தின்கீழ்,  2015 ஜனவரியில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம்  வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதில், 2017 நவம்பர் வரை 1.26 கோடி கணக்குகளுக்கும் கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் மொத்தம் ரூ. 19,183 கோடி சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் தெவித்தார்.

 • 2018-19ஆம் நிதியாண்டுக்கான மொத்த செலவீனம் ரூ. 24.42 லட்சம் கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதம் அதாவது, ரூ.6,24,276 கோடியாக இருக்கும், கடன்கள் மூலம் இந்த பற்றாக்குறை நிறைவு செய்யப்படும்.

 • பொதுத்துறை, தனியார் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த தொழில்துறைக்கு சாதகமான பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்திக் கொள்கை 2018ஐ அரசுகொண்டு வரும்

 • இதுவரை அறிவிப்பு செய்யப்படாத காரிப் பருவ பயிர்களுக்கு உற்பத்திச் செலவைவிட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக (MSP)நிர்ணயிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது

 • 2018-19 ஆம் ஆண்டில் விவசாயக் துறைக்கு வங்கிகள் மூலம் அளிக்கும் கடன் அளவை ரூ.11 லட்சம் கோரியாக உயர்த்துவதாக அரசு அறிவித்தது

 • உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் போன்ற அழுகும் தன்மை உள்ள வேளாண் பொருட்களின் விலை ஏற்ற இறக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு “பசுமை பாதுகாப்புத் திட்டம்” தொடங்கப்படுவதாக 2018-19 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார்

 • தற்பதுள்ள 22,000 ஊரக சந்தைகளை மேம்படுத்தி, கிராம வேளாண்மை சந்தைகளாக (GRAMS-களாக)தரம் உயர்த்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • மீன்வளத் துறைக்கு மீன்வள மற்றும் நீர்வாழ் உயின கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (FAIDF), கால்நடை பராமரிப்புத் துறையில் கட்டமைப்புத் தேவைகளுக்கு நிதி வசதி அளிக்க கால்நடை பராமரிப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (AHIDF)ஆகியவை உருவாக்கப்படும்.

 • மூங்கிலை “பசுமையான தங்கம்”என்று குறிப்பிட்ட திரு ஜேட்லி, ரூ.1290 கோடியில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய மூங்கில் தொலைநோக்குத் திட்டம் தொடங்கப்படும் .

 • வரி செலுத்தும் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்கும்விதமாக வருமானத்திலிருந்து தற்போதைய போக்குவரத்துப் படி, மருத்துவச் செலவினத்தை திரும்ப பெறுதல் ஆகியவற்றுக்கு விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, நிர்ணய குறைப்பாக ரூ. 40,000-த்தை குறைத்துக் கொள்ளப்படும்.

 • கிராமங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்றவையாக ஆக்கவும்  கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக இயற்கை உயிரி-வேளாண் ஆதாரங்கள் நிறைந்த கிராமம் எனப்படும் கோபர்-தன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 • சாலைகள் துறையில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாரத்மாலா பாரியோஜனா, அதன் முதல்கட்டத்தில் ரூ. 5,35,000 கோடி மதிப்பிலான 35,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.

 • சிவில் விமான போக்குவரத்து துறையில், விமான நிலையங்களின் திறனை ஐந்து மடங்குக்குமேல் விரிவாக்கி, ஆண்டுக்கு பத்து கோடி விமானப் பயணங்களை கையாள்வதற்கென நவநிர்மான் என்ற திட்டம் 2018-19ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

 • மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எனப் பெயர் மாற்றம்.

பட்ஜெட் சில சுவாரஸ்ய தகவல்கள்

 • 1947ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 87 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 • 25மத்திய நிதி அமைச்சர்களை சுதந்திர இந்தியா கண்டுள்ளது

 • 4நிதி அமைச்சர்கள் பிரதமராகி உள்ளனர். அவர்கள், மொரார்ஜி தேசாய், சரண் சிங், விபி சிங், மற்றும் மன்மோகன் சிங்.

 • 2நிதி அமைச்சர்கள் குடியரசு தலைவராகி உள்ளனர். அவர்கள், ஆர். வெங்கட்ராமன் மற்றும் பிரணாப் முகர்ஜி.

 • ஒரே குடும்பத்தில் மூன்று பேர்

  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். 1958ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிறகு அவரது மகள் இந்திரா காந்தி 1970ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிறகு 1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 • இந்தியப் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி தான், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

 • பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதியத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு 1999ம் ஆண்டு வரை பொது பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

  அதன்பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், வாஜ்பாயி பிரதமரானார். மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அப்போதுதான் பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது.

 • இந்த ஆண்டிலிருந்து பிப்ரவரி 1 ஆம் தேதியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 • இரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இனைக்க பிபேக் தேப்ராய் குழு 2016ல் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டின் அங்கங்கள்

வருவாய் :

அரசுக்குச் சேர வேண்டிய வரி மற்றும் இதர வருவாய்கள் வருவாய் கணக்கில் சேர்க்கப் படுகிறது. அரசின் செலவுகள் இந்த வருவாயின் மூலம் சரி செய்யப்படுகிறது.

வரி வருவாய் :

மத்திய அரசு வசூலிக்கும் வரிகள் மற்றும் சுங்க வரிகள் இதில் அடங்கும்.

இதர வருவாய்கள் :

அரசின் முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி மற்றும் ஈவுத் தொகை, சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் இதர வகைகளில் அரசுக் குக் கிடைக்கும் வருவாய் இதர வருவாய்களாகும்.

வருவாய் மூலமான செலவினங்கள் :

சாதாரணமாக அரசுத் துறைகளையும் பல்வேறு சேவைகளையும் அரசின் கடன் வைப்பு மூலமான வட்டி விகிதங்களை நிர்வகிப்பதற்கு இந்த வகையில் செலவுகள் செய்யப்படுகின்றன. இதையே வேறு வகையில் சொல்வதானால், அரசு வகையில் சொத்துக்கள் ஏதும் உருவாக்கப் படாத செலவுகள், வருவாய் மூலமான செலவுகள் எனப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள், மற்றும் இதர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடுகளில் வருவாய் மூலமான செலவுகளாகும். இதில் சிலவகை சொத்துக்களை உருவாக்குவதற் கும் இருக்கலாம்.

மூலதனம் வரவு செலவு திட்டம் :

மூலதன வரவுகள் மற்றும் வழங்கல்கள் இதில் அடங்கும். பொதுக்கணக்கு பரிமாற்றங்களும் இந்த வரிகளில் உள்ளன.

மூலதன வருவாய் :

சந்தைக்கடன் என அழைக்கப்படும் பொதுமக்களிடம் இருந்து கடனாக பெறப்படும் மூலதனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அரசு பெறும் கடன்கள், கருவூல ரசீதுகளை இதர பிரிவினருக்கு விற்பனை செய்ததன் மூலமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறும் கடன்கள், மத்திய அரசு நிறு வனங்களுக்கு அளித்த கடன்கள் மூலமான வசூல் ஆகியவை மூலதன வருவாய் எனப்படுகிறது.

மூலதன வழங்கல்கள் :

நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் பங்குகளில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் செலவுகள் மூலதனச் செலவுகள் எனப்படுகிறது. மேலும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், தொழில் நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கும் கடன்கள் முன் பண உதவி ஆகியவை இந்த வகையில் அடங்கும்.

நிதி உதவிக்கான வேண்டுகோள் :

ஒவ்வொரு ஆண்டும் செலவினங்கள் மதிப்பீடு நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டு மக்களவையில் வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறைக்கு ஒரு நிதி உதவி குறித்த கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். பெரிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒன்றுக்கும் மேற் பட்ட நிதி உதவி குறித்த கோரிக்கை வைக்கப்படும்.

நிதி மசோதா :

அரசின் புதிய வரிகள், தற்போதுள்ள வரி முறையில் மாற்றங்கள், நிர்ணயிக்கப் பட்ட காலக் கெடுவுக்கு அப்பால் செயல்படுத்த வேண்டிய வரி முறை ஆகியவற்றில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படுவது நிதி மசோதா.

செயல்பாட்டு வரவு செலவு திட்டம் :

அமைச்சகங்களின் செயல்பாடுகள்திட்டங்கள், நடவடிக்கைகள், ரூ. 100 கோடி அதற்கும் மேற்பட்ட மத்திய அரசு திட்டங் கள் குறித்த தனி அறிக்கைகள் ஆகிய தனிப்பட்ட அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டமாகும்.

குறிப்பிட்ட திட்டத்திற்கான மசோதா :

மக்களவையின் ஒப்புதல் பெற்ற பிறகு, குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதியை மொத்த நிதியிலிருந்து பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக சமர்ப்பிக்கப் படுவது இந்த வகை மசோதா வாகும்.

வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை :

வருவாய் மற்றும் மூலதனக் கணக்கு ஆகியவற்றின் மூலம் மொத்த செலவில் வருவாய் மட்டும் கழித்தால் கிடைப்பது பற்றாக்குறையாகும்.

நிதி பற்றாக்குறை :

வருவாய் மற்றும் கடனல்லாத மூலதனத்தில் கிடைக்கும் வருவாய்க்கு கடன்கள், திருப்பி செலுத்தப்படும் தொகைகள் ஆகியவற்றின் மூலமான செலவு களுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

முதன்மை பற்றாக்குறை :

நிதிப் பற்றாக் குறை யில் வட்டிக்கான தொகையை செலுத்திய பிறகு கிடைப்பது முதன்மை பற்றாக்குறை.

வழங்க வேண்டிய நிலுவைத் தொகை :

அந்த ஆண்டில் உலகின் பல பகுதிகளில் செய்யப்பட்ட நிதி பரிமாற்றம் மற்றும் நாட்டின் வர்த்தகம் குறித்த அறிக்கை.

மூலதன லாப வரி :

ஏற்கனவே விலை கொடுத்துப் பெறப்பட்ட சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் அதிகப் படியான தொகையின் மீதான வரியே மூலதன லாப வரி எனப் படுகிறது.

பணமாற்றம் :

சர்வதேச அளவில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட சொத்துக்கான வெளிநாட்டு பணத்தை வேறு ஒரு நாட்டின் பணத்துக்காக மாற்றிக் கொள்வது அல்லது சர்வதேச கையிருப் புக்காக மாற்றிக் பணமாற்றம். கொள்வது

இறக்குமதி பொருள் மீதான எதிரீட்டு வரி:

இறக்குமதி செய்யப்படும் பொருள் மீது வரி விதிக்கப்படுவதால் உள்நாட்டில் அந்த பொருளின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக இதர நாடுகளில் உள்ளதைப் போன்று முறைசாரா வர்த்தக நடைமுறைகளை உருவாக்கும்.

நேரடி வரி :

வருமானம், சொத்து மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வியாபாரம் ஆகியவற் றுக்கு அரசு விதிக்கும் வரி.

நிதிக் கொள்கை :

வரி மற்றும் அரசு செலவினங்களையும் வரியையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நிதிக் கொள்கை.

மறைமுக வரி :

பொருட்களுக்கும் சேவைகளுக்கும் அரசு வசூலிக்கும் வரி மறைமுக வரி எனப்படு கிறது.

பணக்கொள்கை

பொருளாதாரத்தில் செலவினங்களைக் கட்டுப்படுத்த பணம் வழங்கல், கடன், வட்டி விகிதம் ஆகியவற்றை ஒழுங்கு படுத்துவதற்கான பொருளாதாரக் கொள்கையே இதுவாகும்.

தேசியக் கடன் :

உள்நாட்டிலும் வெளிநாட் டிலிருந்தும் கடன் வழங்கிய வர்கள் மத்திய அரசு செலுத்த வேண்டிய கடன் தொகை.

பொதுக் கடன் :

பல் வகைக் கடன் மற்றும் தேசியக் கடனுக்கு அரசே முழுப் பொறுப்பாகும். தேசியத் தொழிற்சாலைகள், உள்ளூர் அதிகார அமைப்புகளின் கடன்களும் இதில் அடங்கும்.

கருவூல மசோதா :

அரசுக்காக குறுகிய கால கடன் பெறுவதற்கான மசோதா.

மதிப்பு கூட்டுவரி :

பொருட்கள் அல்லது சேவைகளுக்கு அதன் உற்பத்தி நிலையிலிருந்து நுகர்வு நிலை வரை வரி வசூலிக்கப்படும் வரி, விற்பனை விலைக்கும் உற்பத்தி விலைக்கும் இடையே உள்ள தொகைக்கு வரி விதிக்கப்படுவது.

ஆண்டு நிதி அறிக்கை :

ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசின் வரவு கள் மற்றும் செலவுகள் குறித்த மதிப்பீடு அரசியல் சட்டம் பிரிவு 112இன்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது. அரசின் வரவுகள் மற்றும் செலவுகளை எடுத்துக் காட்டும் அறிக்கை. அரசின் மூன்று வகையான கணக்குகள் இதில் உள்ளன.

 1. ஒருங்கிணைக்கப்பட்ட நிதி

 2. தேவைக்கேற்ப செலவிடப் படும் நிதி

 3 பொதுக்கணக்கு

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி :

ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்ட கடன் மூலம் வசூலிக்கப்பட்ட வருவாய், கடன், அனைத்து வகையிலும் வசூலிக்கப்பட்ட வருவாய் இதிலடங்கும். அனைத்து “வகையான அரசு செலவுகளும் இதிலிருந்தே செய்யப்படும். நாடாளு ன்றத்தின் அனுமதியைப் பெறாமல் இதிலிருந்து நிதியை எடுக்க முடியாது.

தேவைக்கேற்ப படும் நிதி :

நாடாளுமன்றத்தில் அனுமதி பெறுவதற்குமுன் திடீரென ஏற்படும் நிதி ஒதுக்கீடுகள் அல்லது செலவினங்கள் ஈடுகட்ட குடியரசுத் தலைவரின் அனுமதி யுடன் இந்த நிதியிலிருந்து பணம் பெற முடியும். தற்போது, ரூ. 500 கோடி வரை இது போன்ற செலவுகளை ஈடுகட்ட நாடாளு மன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொதுக் கணக்கு :

சாதாரண வகையிலான வருவாய் மற்றும் செலவினங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி சார்ந்தவை, இதர சில அரசுக் கணக்கில் உள்ள வரி மாற்றங்கள், ஆகியவற்றுக்கு அரசு வங்கிகள் போல் செயல் பட்டு நிதிக் கணக்கை நிர்வகிக்கிறது. உதாரணமாக நல நிதிகள், சிறுசேமிப்பு கணக்குகள், இதர வைப்புத் தொகைகள் போன் றவை இந்த வகையைச் சார்ந் தவையாகும். இந்த வகையில் பெறப்படும் தொகை பொதுக் கணக்கில் பாதுகாப்பாக வைக்கப் படும். பொதுவாக, இந்த தொகை அரசுக்குச் சொந்தமானதல்ல. எப்போதாவது இத்தொகை திருப்பியளிக்கப்பட வேண்டிய தாகும். இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம்

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் கடந்த 2003ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். நிதி ஒழுங்கை நடைமுறைக்கு கொண்டு வருதல், நிதி பற்றாக்குறையை குறைத்தல், பெருநிலை பொருளாதார மேல £ண்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. நீண்ட கால நோக்கில் நாட்டின் நிதி ஸ்திரத்- தன்மையை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். வெளிப்படையான நிதி மேலாண்மை அமைப்பு , கடன்களை இன்னும் சமத்துவமான முறையில் வினியோகித்தல் ஆகியவற்றையும் இச் சட்டம் வலியுறுத்துகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நிதி நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்வதற்கும் இச்சட்டம் வகை செய்கிறது.

நோக்கம்

 • நிதி பற்றாக்குறை மற்றும் வருவாய் பற்றாக்குறையை ஒவ்வொரு ஆண்டும் எந்தளவுக்கு குறைக்கலாம் என்பதை இச்சட்டத்தின் விதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.

 • 2004&05ம் ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் முதலில் இச் சட்டத்தின் நோக்கமாக இருந்தது.

 • 2008&09ம் ஆண்டில் நிதி பற்றாக்குறையை 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்பதும் இதன் இலக்குகளில் ஒன்றாகும்.

 • அதே நேரத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலோ இந்த சட்டத்தின் விதிகளை தளர்த்திக் கொள்ள அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது.

 • ஒரு நிதியாண்டில் நிதி கொள்கை குறித்து 3 அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

( இச்சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு என்,கே சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது)

One Response

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!