நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 – IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF

நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 –IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி
Þ சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். சர்வதேச மகளிர் தினத்தில் இவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Þ   உடல்நலக் குறைவால் அவதிப்படும் 2 யானைகளை வனத் துறையிடம் ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் உள்ள மதுரவள்ளி என்ற யானையும், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் உள்ள கோமதி என்ற யானையும் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
Þ   சூரிய கிரகணம் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பார்வையிடுவதற்கு பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
கூடுதல் தகவல்
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது, சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போல் தெரியும். சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.
Þஎல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) முதல் பெண் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஸ்ரீ பரீக், சர்வதேச மகளிர் தினமான செவ்வாய்க்கிழமை, பயிற்சி அகாதெமியில் இணைந்தார்.
Þதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 60 சதவீதத் தொகைக்கு (இபிஎஃப்) வரி விதிக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
Þமகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக “181′ என்ற இலவச அழைப்பு எண் தொடங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக “அபயம்என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி விரைவில் தொடங்கப்படும். 
Þபிஹார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 1.6 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவில் வாரத்துக்கு ஒரு முறை வெஜிடபிள் பிரியாணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
Þ உடல் பருமனான மக்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. உடல் மெலிதான ஆண்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் திரிபுராவும் உடல் மெலிதான பெண்கள் பட்டியலில் மேகாலயாவும் முதலிடத்தில் உள்ளன.
Þஎதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக எதிரி சொத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 1965-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1968-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுமார் 48 ஆண்டுகள் பழைமையான இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
Þ இந்திய விமானப் படையின் போர்ப் பிரிவில் முதல் முறையாக பெண் விமானிகள் ஜூன் 18-ஆம் தேதி முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா, இந்தத் தகவலை தில்லியில் தெரிவித்தார். இந்திய விமானப் படையில் பெண் விமானிகள் முதல் முறையாக கடந்த 1991-ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், இதுவரையிலும் ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண்கள் இயக்கி வருகின்றனர்.
Þநேபாள காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தலைவராக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா (69) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Þ   வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி மூத்த தலைவர் மிர் குவாஸம் அலிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
Þபோர்ஸ்( Force 18) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவக் கூட்டுப்பயிற்சி சமீபத்தில் முடிவடைந்த்து. ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளும் பிற நாடுகளும் கலந்து கொண்டன.
Þசமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மார்ச் 12-ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார்.
Þ   இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏஞ்செலோ மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 10) மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட்.  இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்துச் செல்ல உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கெனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஒரு பார்வை:
ü 2013-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட்டிலும்,
ü கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்டிலும்,
ü கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி,
ü கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
ü கடைசியாக ஜனவரி 21-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஈ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பயன்பாடுகள்
ü ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது.
ü இயற்கைப் பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ü மேலும் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும்,
ü வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். 
ü  இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயணநேரம் குறித்துச் சரியான தகவல்களை அளிக்கும்.
ü மேலும் பேரிடர் மேலாண்மை, செல்போன்கள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைப்படங்களைக் கண்காணித்தல், கார், கனரக வாகன (“டிரக்ஸ்‘) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக இயக்கச் சொல்லி வாகனங்களை இயக்கச் செய்ய முடியும்.
ü இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிக்காட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும்.
GPS – ஏன், எதற்கு, எப்படி!
ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆபிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே தனது தேடல்களை மேற்கொள்ளும் போதும், மிகப்பெரிய பிரச்சினை எங்கே இருக்கிறோம் என்பதும், தொலைந்துவிடாமல் மீண்டும் அவனது குழுவிடம் மீண்டும் வரவேண்டுமே என்பதும் ஆகும்.
பழக்கப்பட்ட இடங்களில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் புது இடங்களில்? ஏன் நானே இதுவரை சிறுவயதில் மூன்று முறை தொலைந்திருக்கிறேன்! இன்றும் புதிய இடங்களுக்கு போகும் போது, செல்லும் பாதையை ஒரே தடவையில் ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது  முடியாத காரியமாக தான் இருக்கிறது, என்ன செய்ய ??!!
ஆதிகாலத்தில் பல்வேறு இயற்க்கை அமைப்புக்களை வைத்து அவன் இருக்கும் இடங்களை அடையாளப் படுத்திய மனிதன், பிற்காலத்தில் திசைகாட்டியை கண்டறிந்து பயன்படுத்தினான். தொடர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கைக் கோள்களின் உதவியுடன் GPS என்ற ஒன்றை உருவாக்கிவிட்டான். வானத்தில் இருந்து பார்க்கும் ஆபத்பண்டவர் போல 24 செய்மதிகள் (satellites) பூமியை சுற்றி வந்துகொண்டே இருக்கிறது, அது எந்த நேரமும் நாம் இருக்கும் இடத்தை எமக்கு மிகத் துல்லியமாக தெரிவித்துவிடும்.
இந்த GPS / புவியிடங்காட்டி பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், அது வேலை செய்ய தேவையான கருவிகளைப் பற்றியும் பார்ப்போம். மேலதிகமாக அதைவிடவும் வேறு என்ன தொழில்நுட்பங்கள் இடத்தை அறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் பார்ப்போம்.
இன்று நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. அதிகளவான தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் என்னென்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என்பதை தெரியாமலே பயன்படுத்த வழிவகுத்துவிட்டது. இன்று சர்வசாதாரணமாக நம் எல்லோரது கையிலும் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்ற செல்பேசிகள் உண்டு. ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் இவ்வகை செல்பேசிகள் தனக்குள்ளே தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளை விடவும், மேலும் சில பல கருவிகளை உள்ளடக்கியுள்ளது.
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி முகப்புத்தகத்தில் சட் (chat) செய்யும் போது உங்களது தகவலுக்கு கீழே, நீங்கள் எங்கிருந்து இந்த சட் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் ஊரின் பெயரும் தெரியும். எப்போதாவது இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தது உண்டா? இது என்ன பெரிய விஷயம், நான் எங்கே இருக்கிறேன் என்பது இலகுவாக கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு வாசியுங்கள். இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் முறை உங்களை ஆச்சரியப் படவைக்கும் அது மட்டுமல்ல, அது நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமில்லை! ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி அதை சாத்தியப்படுத்தியுள்ளது. பார்ப்போம் எவ்வாறு என்று!
உங்கள் ஸ்மார்ட்போன்களில் உலக இடைநிலை உணர்வி / GPS – Global Positioning System
நாம் முதலில் GPS பற்றிப் பார்க்கலாம், மிகத்துல்லியமாக (3.5 மீட்டருக்குள்) நாம் இருக்கும் இடத்தை GPS ஐ வைத்து அறிந்துவிடலாம். உங்கள் ஸ்மார்ட்போன்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் GPS வாங்கி (GPS Receiver) இருக்கும். இதனால் தான் உங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கூகிள் மாப்ஸ் மூலம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பார்பதற்கும், மற்றும் வீதி வழிச்செல்லுவதற்கான வழிகாட்டியாகவும் அது பயன்படுகிறது.
GPS ஐ நாம் எல்லோரும் எல்லா நாடுகளிலும் பயன்படுத்துவதால் அது உலகநாடுகளுக்கு சொந்தமான ஒன்று இல்லை. GPS அமெரிக்க வான்படைக்கு சொந்தமான ஒரு தொழில்நுட்பம். அதை உருவாக்கி, பராமரிப்பது அமெரிக்க இராணுவமே. ஆனால், GPS வாங்கி வைத்திருக்கும் யார் வேண்டும் என்றாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மத்திம புவிச் சுற்றுப் பாதையில் (medium earth orbit), அதாவது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20,200 கிலோமீட்டர்கள் உயரத்தில் 24 செய்மதிகள் பூமியை தினமும் இரண்டு முறை சுற்றி வருகின்றன. இந்த செய்மதிகளே GPS இன் அடிப்படைக் கட்டமைப்பாகும்.
இந்த 24 செய்மதிகளும், சம இடைவெளி கொண்ட ஆறு அச்சுக்களில், ஒவ்வொன்றிலும் 4 செய்மதிகள் வீதம் பூமியை சுற்றுகின்றன. இந்த 24 செய்மதிகள் சுற்றும் இடங்கள்/ அச்சுக்கள், அடிப்படை அச்சுக்கள் (baseline slots) என்று அழைக்கப்படும். இந்த செய்மதிகளின் சுற்றுப் பாதை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால், பூமியில் எந்தவொரு இடத்தில் இருந்து அவதானித்தாலும், குறைந்தது 4 GPS செய்மதிகள் தெரியும்.

எப்படி GPS வேலை செய்கிறது?

1இந்த GPS செய்மதிகள் தொடர்ந்து ரேடியோ சமிக்ஞைகளை பூமியைநோக்கி பரப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த சமிக்ஞைகளில் அந்த குறிப்பிட்ட செய்மதியின் தற்போதைய இடம், அதன் நிலை மற்றும் துல்லியமான நேரம் என்பன அடங்கும்.
ஒவ்வொரு GPS செய்மதியும் அணுககடிகாரங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.
2.   இந்த ரேடியோ சமிக்ஞைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்.
3.   நம்மிடம் இருக்கும் GPS வாங்கி (GPS receiver) இந்த சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளும். இப்படி பெற்றுக்கொள்ளும்போது அந்த சமிக்ஞைகள் வந்தடைந்த மிகத்துல்லியமான நேரத்தையும் குறித்துக்கொள்ளும்.
4.இப்படி குறைந்தது 4 செய்மதிகளில் இருந்து சமிக்ஞைகளை பெற்றுக்கொண்டால் டிரைலேடரஷன் என்னும் கணிதவியல் முறையைப் பயன்படுத்தி அந்த GPS வாங்கி இருக்கும் இடத்தை அதனால் கணிக்கமுடியும்.
இந்த டிரைலேடரஷன் மூலம் எப்படி இடத்தை கண்டு பிடிக்கலாம் என்று சுருக்கமாக பார்ப்போம். நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் இருக்கும் இடம் என்ன என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்கள் நண்பர்கள் சிலரிடம் சில தகவல்கள் உண்டு அதுமட்டுமலாது உங்கள் நண்பர்கள் இருக்கும் இடமும் உங்களுக்கு தெரியும். நண்பர் A இற்கு அவரிடம் இருந்து நீங்கள் 10km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். அதே போல நண்பர் B, நீங்கள் அவரிடம் இருந்து 15km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நண்பர் C யும் நீங்கள் அவரிடம் இருந்து 12km தூரத்தில் இருப்பதாக கூறினால், இப்போது இந்த டிரைலேடரஷன் முறையைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக உங்களால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.
இந்த நண்பர்கள் போலதான் GPS செய்மதிகளும் செயல்படுகின்றன. உங்கள் GPS வாங்கி இந்த செய்மதிகளிடம் இருந்து வரும் சமிக்ஞைகள் மூலம் ஒவ்வொரு செய்மதியும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்று கணக்கிடுகிறது. இதேபோல மூன்று செய்மதிகளின் தகவல் கிடைத்தவுடன் அது நீங்கள் இருக்கும் இடத்தை கணித்துவிடும். நான்காவது செய்மதி இந்த இடம் சார்ந்த தகவலின் துல்லியத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
இந்த செய்மதிகள் எவ்வாறு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அறிவது? நமது உதாரணத்தின் படி, நண்பர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று நமக்கு சொன்னார்கள் ஆனால் இந்த செய்மதிகள்? எப்படி அது சாத்தியம்?
தூரம் = வேகம் x நேரம்
இந்த எளிய சமன்பாடுதான் இங்கு பயன்படுகிறது. இங்கு GPS இன் சமிக்ஞைகள் ரேடியோ அலைகள் என்பதனால் அதன் வேகம் செக்கனுக்கு 299,792,458 மீற்றர்கள். நேரம் இங்கு இந்த நேரக்கணிப்பு தான் மிக முக்கியமானது. இதற்குதான் இந்த GPS செய்மதிகள் மிகத்துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட அணுக்கடிகாரங்களை பயன்படுத்துகின்றன. செய்மதிகளில் இருந்து சமிக்ஞைகள் எவ்வளவு நேரத்தில் வந்தடைகின்றன என்பதை இந்த கடிகார நேரத்தை வைத்துக் கணக்கிடமுடியும், அதன் பின் தெரிந்த வேகம், நேரத்தை வைத்து ஒவ்வொரு செய்மதியும் இருக்கும் தூரம் கணக்கிடப்படும். இவ்வாறு மூன்று செய்மதிகளின் தூரம் கணக்கிடப்பட்டால், GPS வாங்கியின் இருப்பிடம் துல்லியமாக அறியப்பட்டுவிடும்.
GPS இலும் ஐன்ஸ்டீன்
பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20000 கிலோமேடர்கள் உயரத்தில் இந்த GPS செய்மதிகள் சுற்றுவதாலும், மணிக்கு 14000 கிலோமீட்டர்கள் வேகத்தில் அவை பூமியை சுற்றி வருவதாலும், பூமியில் இருந்து நோக்கும் போது இந்தசெய்மதிகளில் நேரம் சிறிது வேகம் குறைவாகவே துடிக்கிறது. GPS மிகத்துல்லியமாக் வேலை செய்ய நேரமானது 20 இல் இருந்து 30 நானோசெக்கனுக்குள் துல்லியமாக அளக்கப்படவேண்டும்.
ஐன்ஸ்டினின் சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் படி, இந்த GPS செய்மதிகளின் நேரம் ஒரு நாளுக்கு 7 மைக்ரோசெக்கன்கள் வீதம் பூமியை விட குறைவாகவே இருக்கும் (அவை பூமியில் இருப்பவரோடு ஒப்பிடும் போது மிகவேகமாக பயணிப்பதால்). அப்படி என்றால் இந்த செய்மதிகளில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாளைவிட 7 மைக்ரோசெக்கன்கள் குறைவு. நிற்க இன்னும் இருக்கிறது.
அனால் ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போடுகிறது. அதாவது ஈர்ப்புவிசையால் நேரத்தின் வேகத்தை மாற்றமுடியும். திணிவு அதிகமாக இருக்கும் பொருளுக்கு அருகில் நேரம் துடிப்பதை விட தூரத்தில் நேரம் வேகமாக துடிக்கும், ஆக பூமியில் உள்ள கடிகாரத்தைவிட இந்த செய்மதிகளில் கடிகாரம் சற்று வேகமாக துடிக்கும். பொ.சா.கோ இந்த செய்மதிகளில் உள்ள கடிகாரம் பூமியில் உள்ளதை விட 45 மைக்ரோசெக்கன்கள் வேகமாக துடிக்கும்! அப்படியென்றால் இந்த செய்மதிகளில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாள் என்பதைவிட 45 மைக்ரோசெக்கன்கள் அதிகம்.
ஆக சி.சா.கோ மற்றும் போ.சா.கோ ஆகியவற்றை சேர்த்துக் கருதினால் பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த செய்மதிகளில் நேரமானது 38 மைக்ரோசெக்கன்கள் (38000 நானோசெக்கன்கள்) வேகமாக துடிக்கிறது (45-7=38). இந்த நேர வித்தியாசத்தை கணக்கில் எடுக்காவிடில் வெறும் இரண்டு நிமிடங்களிலேயே GPS மூலம் பெறப்படும் இருப்பிடம் பிழையாகிவிடும். ஒரே நாளில் GPS மூலம் பெறப்படும் இருப்பிடத்தின் தகவலும் உண்மையான இருப்பிடத்தின் தகவலுக்கும் இடையில் 10km இடைவெளி வந்துவிடும். ஆக நாட்கள் செல்லச் செல்ல இந்த பிழையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் அதோடு இந்த GPS பயனற்ற ஒரு விடயமாகிவிடும்.
இதற்காக இந்த GPS செய்மதிகளை உருவாக்கிய அறிவியலாளர்கள், இதில் உள்ள அணுக்கடிகாரம் வேகம் குறைவாக துடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், பூமியைச் சுற்றும் இந்த GPS செய்மதிகளில் உள்ள கடிகாரங்கள் பூமியில் உள்ள கடிகாரங்களைப் போலவே இயங்கும் இதனால் இந்த சார்புக் கோட்பாடுகளால் உருவான நேர வேகமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்தது!  மாபெரும் இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது!
சரி பிறகு?!
இப்படித்தான் GPS வேலைசெய்கிறது என்று இப்போது உங்களுக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும். இன்று இந்த GPS தொழில்நுட்பம் பல்வேறு பட்ட துறைகளில் பயன்படுகிறது. மற்றும் நம் வாழ்விலும் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அது வேறு விடயம்!
GPS அமெரிக்க தொழில்நுட்பம் என்று முன்னரே கூறினேன். இது இலவசமாக பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் முழு கட்டுப்பாடும் அமெரிக்க இராணுவத்திடமே இருக்கிறது. இதனால் வேறு சில நாடுகளும் தங்களுக்கென்றே தனித் தனியான அமைப்புக்களை உருவாகியுள்ளன.
GLONASS – ரஸ்சியாவின் முழு உலகிற்குமான புவியிடங்காட்டி
Galileo – ஐரோப்பிய ஒன்றியத்தின் புவியிடங்காட்டி – 2014 இல் தொழில்பட தொடங்கியது, 2019 இல் பூரணப்படுத்தப்படும்.
Beidou – சீனாவின் புவியிடங்காட்டி ஆசியாவுக்கும் மேற்கு பசுபிக் நாடுகளுக்கும் மட்டும்.
IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி இந்தியா மற்றும் வடக்கு இந்து சமுத்திரப் பரப்புக்கு மட்டும்.
THANKS TO SRI SARAVANA FOR GPS
தொகுப்பு
ஐயாச்சாமி முருகன்

 நெல்லை 

Add a Comment

You must be logged in to post a comment

Shopping Basket
error: Content is protected !!