பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
இது என்ன ”பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம்” தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஒரு கதையின் தலைப்பு மாதிரி இருக்கிறதே என்று சிந்தித்திருக்க கூடும் , இத்தலைப்பு இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்கள் என அழைக்கப்ப்டும் பட்டிக் காட்டின் ஆட்சியர் போல செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிமுதல் பாரளமன்றத்திற்கு பாரளமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர் ,ஏன் ? குடியரசுத் தலைவர் தேர்தலையே நடத்தும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா செயலாளர் வரையிலான இந்திய ஆட்சிப் பணி வரை எவ்வாறு தயாராவது என்ற இலக்கை அடிப்படையாக வைத்து இத்தொடரை எழுதத் துவங்கியிருக்கிறேன். இத்தேர்வுக்கு தயாராவது எவ்வாறு என்பது பற்றி ஏற்கனவே உயர்பணியில் உள்ள அதிகாரிகள் எழுதியுள்ளனர் இருப்பினும்
நான் எழுதுவது எவ்வாறு வேறுபடும் என்று சந்தேகம் எழக்கூடும், சிறு வேறுபாடுதான் உள்ளது அவர்கள் இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நான் வெற்றி பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்.
இத்தொடரானது நாம் தயாராகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் என்னென்ன நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம் என்பது முதல் அது எவ்வாறு நமது தேர்வுப் பயனத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது,குறிப்பாக சொல்லப் போனால் நமது வினாத்தாளின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் செய்யக் கூடியவை எவை செய்யக் கூடாதது எவை என்பது பற்றித்தான் எழுதப் போகிறேன்.
நாம் ஒரு விவசாயியை உதராணமாக வைத்து துவங்குவோம், ஒரு நிலத்தில் பயிரிடத் துவங்கும் முன் அவர் நிலத்தினை சீர் செய்வார் பின்பு தண்ணீரை எவ்வாறு கொண்டுவருவது பின் எம்மாதிரியான பயிரினைப் பயிரிட வேண்டும், இப்பயிரினைப் பயிரிடுவதால் பின்பு வேறு ஒரு பயிர் செய்ய ஏதுவாக இருக்குமா?, எடுத்துக் காட்டாக சில நேரங்களில் நெல் பயிரிடுவதற்கு முன்பு சிலவகையான பயிரைப் பயிரிடுவார் பின்பு நெல் பயிரிடும் போது அப்பயிரை அப்படியே சேர்த்து உழுதிடுவர். சரியான காலத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், பயிர் பயிரிட்டபின்பு களை பறித்தல் , இடைக்காலத்தில் நோய்த் தாக்குதலில் இருந்து பயிரினைப் பாதுகாக்க மருந்து தெளித்தல் , அதிக விளைச்சலுக்கு உரமிடுதல் , விளைச்சலுக்குப் பின் பயிரினைப் பாதுகாத்தல் , சந்தைக்கு கொண்டு செல்லுதல் என அவரின் பணியானது தொடர்ந்து கொண்டே இருக்கும் . இவ்விடைப் பட்ட காலத்தில், இயற்கைச் சீற்றம் , விலங்குகள் பயிரினைச் சேதப்படுத்துவது போன்றவை ஏற்படும் அதனையும் அவர் எதிர்கொள்வார்.
இதனைப் போல்தான் நாம் இத்தேர்வுக்கு தயாராகும் போது விவசாயி செய்கின்ற பணியினைச் செய்ய வேண்டும், முதலில் திட்டமிட வேண்டும், குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் போது பிற தேர்வுகளுக்கும் எவ்வாறு தயார் செய்வது?. இக்கால கட்டத்தில் பயிருக்கு தண்ணீர் , உரமிடுதல் போன்ற பணிகளை செய்வது போல் நாமும் நமது தேர்வு தயாரிப்பு வளர்ச்சிக்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதாவது சிறந்த வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். கடைசியாக அவர் சந்தைக்கு விளை பொருளைக் கொண்டு சேர்ர்பது வரை செய்யும் முயற்சியை நாம் நமது லட்சியப் பணியை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
இத்தொடரில் எனக்கு தெரிந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது உங்களுக்கு எந்த் வகையில் பயனளித்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!. நீங்கள் எப்படித் தேர்வுக்கு தயார் செய்தாலும் வெற்றி பெறவேண்டும் என்பதே என் விருப்பம்
”நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!”
விவேகானந்தர்
நன்றி
வாழ்த்துக்களுடன்
ஐயாச்சாமி முருகன்
திருநெல்வேலி
குறிப்பு உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன
15 நாள் இடைவெளியில் தொடராக பதிவிடப் படும்.