தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு விண்ணப்பிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்
நான் நிரந்தரப்பதிவில் தவறுதலாக சில விவரங்களை பதிவு செய்துவிட்டேன். அதனை என்னால் மாற்ற முடியவில்லை. என்ன செய்வது?
நிரந்தரப்பதிவில் உங்களது பெயர், பிறந்த நாள், மதம், மற்றும் ஜாதி ஒதுக்கீட்டு பிரிவு (Communal Category) SSLC பதிவு எண், தேர்வான மாதம் மற்றும் வருடம் போன்ற சில முக்கியமான விவரங்களை நீங்கள் மாற்ற முடியாது. எனவே இவ்விவரங்ககைளை பதிவு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் ஒரே ஒருமுறை மட்டுமே நீங்கள் ஒரு சில விவரங்களை மாற்றிக்கொள்ளலாம். உங்களால் அவ்விவரங்களை மாற்ற முடிய வில்லை எனில் தகுத்த ஆதாரங்களுடன் apdtech2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனு அனுப்ப வேண்டும். அதனை பரிசீலித்த பின்னர் உங்கள் தகவல் சரியானதாக இருந்தால் அதனை தேர்வாணையத்தின் உதவியுடன் மாற்றிட இயலும். உங்களது கோரிக்கைகளை நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மூலமாகவே அனுப்பவேண்டும்.
எனது நிரந்தரப்பதிவின் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஆகியவற்றை மறந்துவிட்டேன்? என்ன செய்வது?
உங்களது பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஐ மாற்றிக்கொள்ளவும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வசதிகள் உள்ளன. அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக தேர்வாணையத்தினை அணுக வேண்டியதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி திரும்ப பெறலாம்.
https://www.i-register.co.in/tnpscotrpwd/frmForgotPassword.aspx
https://www.i-register.co.in/tnpscotrpwd/frmForgotLoginId.aspx
நான் நிரந்தரப்பதிவு செய்யும்போது “Details already exists” என்று செய்தி வருகிறது ஏன்?
நீங்கள் ஏற்கனவே உங்களது விவரங்களை நிரந்தரப்பதிவில் பதிவு செய்திருந்தால் இந்த செய்தி வரும். எனவே ஏற்கனவே பதிவு செய்த தகவல்களை கொண்டு மீண்டும் பதிவு செய்ய முடியாது
பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) மாற்றிக்கொள்ள முயலும்போது “Invalid User Details” என்ற தகவல் வருகிறது ஏன்?
பயனாளர் குறியீடு (USER ID) ஐ தெரிந்துகொள்ளவும் மற்றும் கடவுச்சொல் (PASSWORD) ஐ மாற்றிக்கொள்ளவும் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த சரியான தகவல்களை உள்ளிடு செய்தால் மட்டுமே அதற்கான தகவல்கள் கிடைக்கும். தவறான தகவல்களை உள்ளிடு செய்தால் “Invalid User Details” என்ற தகவல் மட்டுமே வரும். அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.
நான் நிரந்தரப்பதிவில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பதிவினை ஆக்டிவேட் செய்ய எனக்கு OTP வரவில்லை.
நீங்கள் தவறான மொபைல் ஃபோன் எண்-ஐ பதிவு செய்திருந்தாலோ அல்லது பதிவு செய்த எண் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலோ அல்லது உங்களின் மொபைல் ஃபோன் மொபைல் நெட்வொர்கிலிருந்து தொடர்ந்து 4 மணி நேரம் தொடர்பில் இல்லாமல் இருந்தாலோ உங்களது கைபேசி எண்ணுக்கு OTP வராது. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்னுக்கு ஒரு முறை மட்டுமே OTP எண் அனுப்பி வைக்கப்படும்.
OTP இல்லையென்றால் நான் எனது கணக்கினை ஆக்டிவேட் செய்ய முடியாதா?
உங்களது கணக்கினை ஆக்டிவேட் செய்வதற்கான இணைப்பு (link) நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதனை கிளிக் செய்தும் தங்களது கணக்கினை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்
நான் தவறுதலாக வேறு ஒருவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்-ஐ பதிவு செய்துவிட்டேன். அதனை எப்படி மாற்றுவது?
கவலைப்படத்தேவையில்லை. நீங்கள் உங்கள் நிரந்தரப்பதிவின் கணக்கில் உள்நுழைந்து “Edit Profile” ஐ கிளிக் செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்களை மாற்றிக்கொள்ளலாம்.
நான் நிரந்தரப்பதிவில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தினை இணையவழியே செலுத்திவிட்டேன். ஆனாலும் எனக்கு இன்னும் நிரந்தரப்பதிவுக்கான கணக்கு ஆக்டிவேட் ஆகாமல் நிலுவையில் உள்ளது.
பொதுவாக இணையவழியே கட்டணம் செலுத்தினால் உடனடியாக பணப்பரிமாற்றம் நிகழ்ந்து உங்களது கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும். ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் பணப்பரிமாற்றம் நடைபெற்றும் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகாமல் இருந்தால் நிரந்தரப்பதிவில் Applicant Login என்ற பக்கத்தில் “PAYMENT STATUS” ஐ கிளிக் செய்து உங்களது விவரங்களை உள்ளிடு செய்து நீங்கள் எத்தனை முறை பணம் செலுத்தியுள்ளிர்கள் அதில் எத்தனை முறை தோல்வி அடைந்துள்ளது எம்முறை பணப்பரிமாற்றம் சரியாக நடைபெற்றுள்ளது என்ற விவரங்ககளை தெரிந்துகொண்டு அதனை கிளிக் செய்து UPDATE செய்தால் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
நான் நிரந்தரப்பதிவுக்கான கட்டணம் ரூபாய் 150 ஐ செலுத்தி என்னுடைய கணக்கினை ஆக்டிவேட் செய்துவிட்டேன். இனி நான் தேர்வுக்கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது அவசியமா?
ரூபாய் 150 என்பது நிரந்தரப்பதிவுக்கான கட்டணம் மட்டுமே. நீங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படாதவராகவோ அல்லது தேர்வுக்கட்டணச்சலுகை பெற தகுதியில்லாதவராக இருப்பின், குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக்கட்டணத்தை கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். இல்லையேல் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நான் எனது நிரந்தரக்கணக்கின் விவரங்களை மறந்துவிட்டேன். எனவே நான் புதிதாக ஒரு நிரந்தரக்கணக்கு தொடங்கலாமா?
தேர்வாணையத்தின் அறிவுரைகளின்படி, ஒருவர் ஒரே ஒரு நிரந்தரக்கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். தவறான விவரங்களைக்கொடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரக்கணக்கு வைத்திருப்பவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்களது விவரங்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது கண்டறியப்படும் என்பதால் தவறான விவரங்களைக்கொடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம்.
நீங்கள் ஏற்கனவே நிரந்தரப்பதிவு செய்து அதன் விவரங்களை மறந்துவிட்டால், தங்களது. பெயர், பிறந்த தேதி, எஸ்.எஸ்.எல்.சி பதிவு எண், எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் எண் மற்றும் தேர்ச்சி பெற்ற மாதம், வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டு APDTECH2014@GMAILCOM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனு அனுப்பி நிரந்தரப்பதிவின் பயனாளர் குறியீடை (LOGIN ID) அறிந்து கொள்ளலாம்.
நான் தெரியாமல் தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவுகள் செய்துவிட்டேன்? என்ன செய்வது?
தேர்வாணையத்தின் அறிவுரைகளின் படி ஒரு விண்ணப்பதாரர் ஒரே ஒரு முறை மட்டுமே நிரந்தரப்பதிவில் பதிவு செய்ய வேண்டும். தேர்வாணையம் கோரும் மிகச்சரியான விவரங்களை பதிவு செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவினை பதிவு செய்ய இயலாதபடி விண்ணப்பம் வடிவமைக்கப்படுள்ளது. நீங்கள் தவறான தகவல்களை பதிவு செய்தால் மட்டுமே இரண்டாவது முறை பதிவு செய்ய இயலும். ஒருவேளை தவறுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்துவிட்டால் எந்தப் பதிவில் சரியான தகவல்களை பதிவு செய்துள்ளிர்களோ அந்த பயனாளர் குறியீட்டினையே அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க பயன் படுத்தவும், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் குறியீட்டினைப் பயன்படுத்தி ஒரே தேர்வுக்கோ அல்லது பல்வேறு தேர்வுக்கோ விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதோடு, தவறான தகவல்களை அளித்திருந்தால் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலிருந்து தாங்கள் விலக்கி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பின்னர் சில விவரங்களை மாற்ற கோரி அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமா?
பரிசீலிக்கப்படாது. எனவே விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
எனது பெயரை மாற்றம் செய்துவிட்டேன். அது அரசிதழிலும் வெளியாகியுள்ளது. ஆனால் சான்றிதழ்கள் அனைத்திலும் பழைய பெயர் மட்டுமே உள்ளது. எந்த பெயரில் விண்ணப்பிக்க வேண்டும்?
ஒருமுறை பெயர் மாற்றம் செய்து அது அரசிதழில் வெளியாகிவிட்டால் மாற்றம் செய்த பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவேளை தங்களது விண்ணப்பத்தில் பழைய பெயர் இருப்பின் அதனை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதனை தெரிவித்துக்கொள்ளலாம்.
நான் தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன், ஆனால் விண்ணப்பத்தில் எனது பிறந்த நாள் தவறாக உள்ளது. மாற்ற முடியவில்லை.
தங்களது பெயர், தாய், தந்தை பெயர், பிறந்த தேதி, மதம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், மதம், சாதி பிரிவு, எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் விவரங்கள் போன்றவை நிரந்தரப்பதிவில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவதால் அவற்றை தேர்வுக்கான விண்ணப்பத்தில் மாற்ற இயலாது. அவற்றை நிரந்தரப்பதிவில் மாற்றம் செய்த பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நான் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டுமா?
நீங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி அல்லது ஆதரவற்ற விதவையாக இருந்தாலோ நீங்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்படுவீர்கள். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே மூன்று முறை தேர்வுக்கட்டணச்சலுகை பெற முடியும். முன்னாள் இராணுவத்தினர் இரண்டுமுறை கட்டணச்சலுகை துய்க்க முடியும். கட்டணச்சலுகையை மூன்று / இரண்டு முறை பயன்படுத்தியவர்கள் அதன் பின்னர் தேர்வுக்கட்டணம் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும்.
நான் ஏற்கனவே ஒரு நிரந்தரப்பதில் மூன்று முறை கட்டணச்சலுகையை பயன்படுத்திவிட்டேன். மீண்டும் ஒரு புதிய நிரந்தரப்பதிவு செய்து மீண்டும் மூன்று முறை கட்டணச்சலுகை பெறலாமா?
ஏற்கனவே கூறியதுபோல் ஒருவர் ஒரே ஒரு நிரந்தரப்பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தரப்பதிவு செய்து அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கட்டணச்சலுகையை பயன்படுத்தினால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தவறான தகவல் கொடுத்த காரணத்திற்காக நீங்கள் தேர்வு எழுதுவதிலிருந்து ஒதுக்கி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?
வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்ட்ப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.
#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?
எந்த ஒரு தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி என்னவோ அதை தமிழ் வழியில் படித்திருந்தால் நீங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறமுடியும். குருப் 4 தேர்வைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தான் கல்வித்தகுதி எனவே 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும். எ.கா நீங்கள் 9 வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்திருந்தாலும் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்தான்.
#அப்படியென்றால் , கல்லூரியில் வாங்கவா அல்லது பள்ளியில் வாங்கவா?
10 ஆம் வகுப்பு எங்கு படித்தீர்களோ அந்த பள்ளியில் வாங்கவேண்டும். ஏற்கனவெ வாங்கியிருந்தால் தேவையில்லை . தனியராக தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து பள்ளிக்கல்வித்துறையில் வாங்க வேண்டும்.
ஆதாராம் : தமிழ்நாடு அரசுப்பணியாளார் தேர்வாணையம்